கண்ணை நம்பாதே – விமர்சனம்

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் உதயநிதி ஸ்டாலின், பிரசன்னாவுடன் ரூம்மெட் ஆகுகிறார். அன்று இரவு ஒரு விபத்தில் சிக்கும் பூமிகாவை அவரது இல்லத்தில் விட்டு, அவரின் காரை எடுத்து வருகிறார். போதையில் இருக்கும் பிரசன்னா, உதயநிதிக்கு தெரியாமல் காரை எடுத்துக் கொண்டு பூமிகா வீட்டிற்கு செல்கிறார். அங்கு பூமிகாவிடம் தவறாக நடந்து கொள்ளும் பிரசன்னா, ஒரு கட்டத்தில் எதிர்பாராத விதமாக பூமிகாவை கொலை செய்து விடுகிறார்.

மறுநாள் காலையில் காரில் பூமிகாவின் சடலத்தை பார்க்கும் உதயநிதி அதிர்ச்சி அடைகிறார்.   இந்த கொலை பழியை உதயநிதி மேல் போடும் பிரசன்னா, சடலத்தை மறைக்க உதயநிதிக்கு உதவி செய்கிறார். அப்போது மேலும் ஒரு விபத்தில் ஒருவர் இறக்க, இரண்டு சடலத்தை வைத்து எப்படி தப்பிக்க என்று பிரசன்னாவும், உதயநிதியும் திட்டம் போடுகிறார்கள். மறுபக்கம் இவர்களின் திட்டத்தை தெரிந்துக் கொண்டு மர்ம நபர் மிரட்டுகிறார்.     இறுதியில் உதயநிதி, பிரசன்னா இருவரும் கொலை பிரச்சனையில் இருந்து தப்பித்தார்களா? இவர்களை மிரட்டும் மர்ம நபர் யார்? மிரட்ட காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.  

ஒரு கொலை, அதை மறைக்க போராடும் இரண்டு நண்பர்கள், பிளாக்மெயில், மெடிக்கல் கிரைம் என திரில்லர் பாணியில் படமாக்கியுள்ளார் இயக்குனர் மு.மாறன். திரைக்கதையில் சில கேள்விகள் இருந்தாலும், பெரியதாக தெரியவில்லை. அடுத்தடுத்த காட்சிகள் என்ன என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு படத்தை கொடுத்து இருக்கிறார் இயக்குனர். இறுதி காட்சி வரை டுவிஸ்ட் வைத்து இருப்பது சிறப்பு. அனைத்து கதாபாத்திரங்களுக்கும் சரியான முக்கியத்துவத்தை இயக்குனர் கொடுத்துள்ளார்.   கதையின் நாயகனாக நடித்திருக்கும் உதயநிதி, செய்யாத குற்றத்திற்கு போராடும் இளைஞனாக நடித்து மனதில் இடம் பிடிக்கிறார். காதல், பரிதவிப்பு என கிடைக்கும் இடங்களில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து கவனிக்க வைத்து இருக்கிறார் பிரசன்னா. அதுபோல் ஶ்ரீகாந்த் தனக்கு கொடுக்கப்பட்ட கதாபாத்திரத்தை சிறப்பாக செய்து இருக்கிறார்.   நீண்ட இடைவெளிக்குப் பிறகு சவாலான கதாபாத்திரத்தை ஏற்று நடித்து இருக்கிறார் பூமிகா. காதலியாக வரும் ஆத்மிகா, அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். மிரட்டும் வசுந்தரா, பயப்படும் சுபிக்ஷா ஆகியோர் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார்கள்.   சித்து குமார் இசையில் பாடல்கள் அனைத்தும் ரசிக்கும் விதம். இவரது பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. ஜலந்தர் வாசனின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. மொத்தத்தில் கண்ணை நம்பாதே – நம்பலாம்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!