இரும்பன் – விமர்சனம்

நாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆர். குறவர் இனத்தைச் சேர்ந்தவர். பழையப் பொருட்களை சேகரித்து அதில் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைப்பு நடத்தி வருகிறார். வட இந்திய குடும்பத்தை சேர்ந்தவர் நாயகி ஐஸ்வர்யா தத்தா, ஒருமுறை எளிய மக்களுக்கு உதவுவதைப் பார்க்கும் ஜூனியர் எம்.ஜி.ஆர். முதல் பார்வையிலேயே மனதைப் பறிக்கொடுப்பதோடு, காதலிக்கவும் செய்கிறார். ஆனால் துறவியாக மாறி தொண்டு செய்யும் நோக்கத்தில் ஐஸ்வர்யா தத்தா மடத்தில் சேர்ந்துவிடுகிறார். அவரின் முடிவை விரும்பாத நாயகன், அவரை கடத்தி திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார். இறுதியில் இவரின் இந்த முயற்சிக்கு வெற்றி கிடைத்ததா? நாயகி துறவியாக காரணம் என்ன? இதன் பின்னணியில் யார் இருக்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஜுனியர் எம்.ஜி.ஆர். அறிமுக படத்திலேயே நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். குறவர் பாத்திரத்துக்கு ஏற்ற மாதிரியான உடல்மொழி, தோற்றம் என அனைத்தும் இவருக்கு கச்சிதமாக பொருந்தியுள்ளது. காதல், காமெடி, சண்டை, நடனம் என பல பரிணாம காட்டியுள்ளார். சண்டை காட்சிகளில் பாராட்டுகளை பெறுகிறார். வித்தியாசமான வேடம் ஏற்று நடித்திருக்கும் ஐஸ்வர்யா தத்தா கவர்ச்சியும் காட்டியுள்ளார். யோகி பாபுவின் காமெடி திரையரங்குகளில் ரசிகர்களை சிரிப்பலையில் கொண்டு செல்கிறது. சென்றாயன், அக்கா கணவராக வரும் ஷாஜி சவுத்ரி, போலீஸாக வரும் சம்பத்ராம் என அனைவரும் தங்கள் பங்களிப்பை சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்.
எதார்த்த கதையை அழகாக பார்வையாளர்களிடம் கடத்தியுள்ளார் இயக்குனர் கீரா. இரண்டாம் பாதி திரைக்கதையில் தொய்வு இருப்பது படத்துக்கு பலகீனம். வித்தியாசமான காதல் கதையை விறுவிறுப்பாக படமாக்கியுள்ளது பாராட்டை பெறுகிறது. நடுக்கடல் மற்றும் வனப்பகுதி அழகை அற்புதமாக காட்சிப்படுத்தி பாராட்டுக்களை பெறுகிறார் ஒளிப்பதிவாளர் லெனின் பாலாஜி. ‘நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடி’ ரீமிக்ஸ் பாடலுக்கு ஆட்டம் போட வைத்துள்ளார் ஸ்ரீகாந்த் தேவா. பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். மொத்தத்தில் இரும்பன் – பார்க்கலாம்


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!