தக்ஸ் – விமர்சனம்

ஹிருது ஹாரூன் தாதாவிடம் வேலை பார்த்து வருகிறார். இதனிடையே ஆதரவற்ற இல்லத்தில் வளரும் அனஸ்வரா மீது ஹிருதுவுக்கு காதல் ஏற்பட்டு இருவரும் தீவிரமாக காதலித்து வருகின்றனர். தனது காதலிக்கு ரவுடி ஒருவன் தொல்லை கொடுக்கிறார். அவனை கொலை செய்து தாதாவின் பணத்தையும் கொள்ளையடித்து காதலியுடன் ஹிருது தலைமறைவாகிறார். தீவிர தேடுதலுக்கு பிறகு ஹிருதுவை போலீஸ் தேடி கண்டுப்பிடித்து கைது செய்து சிறையில் அடைக்கிறது.

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தவர்களை கொன்று விட்டு சிறையில் தண்டனை அனுபவிக்கும் பாபி சிம்ஹாவின் நட்பு ஹிருதுவுக்கு கிடைக்கிறது. இருவரும் இணைந்து சிறையில் இருந்து தப்பிக்க திட்டம்தீட்டுகின்றனர். இருவரும் சிறையில் இருந்து தப்பித்தார்களா? ஹிருது தனது காதலியுடன் சேர்ந்தாரா? இறுதியில் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

அறிமுக நடிகர் ஹிருது ஹாரூன் அந்த கதாபாத்திரத்திற்கு சிறப்பாக பொருந்தியுள்ளார். புதுமுக நடிகர் என்ற எண்ணம் தோன்றாதது போல் இவரின் நடிப்பு தேர்ந்துள்ளது. ஜெயிலில் இருந்து தப்பிக்க போடும் திட்டங்களில் கைத்தட்டல் பெறுகிறார். சண்டை காட்சிகளில் அதிகம் உழைத்துள்ளார். காதல், ஆக்‌ஷன் என பல பரிணாமங்கள் காட்டி தேர்ந்த நடிகராக தோன்றுகிறார்.

காதலி நடித்திருக்கும் அனஸ்வரா ராஜன் சில காட்சிகளில் மட்டுமே தோன்றினாலும் மனதில் பதிந்துள்ளார். பாபிசிம்ஹா கதாபாத்திரத்துக்கு சிறந்த தேர்வு. பிளாஷ்பேக் காட்சிகளில் பார்வையாளர்களை உருக வைத்துள்ளார். கண்டிப்பான சிறை அதிகாரியாக வரும் ஆர்.கே. சுரேஷ் கூடுதல் கவனம் பெறுகிறார். முனிஸ்காந்தின் காமெடி கலந்த பேச்சு சிரிக்க வைக்கிறது. சண்டை காட்சிகளிலும் நடித்து பாராட்டுக்களை பெறுகிறார்.

சிறையை மையமாக வைத்து அதிரடி படம் கொடுத்துள்ளார் இயக்குனர் பிருந்தா. ஆக்‌ஷன் காட்சிகளை பிசிறு இல்லாமல் செதுக்கியுள்ளார். திரைக்கதையை சிறப்பாக வடிவமைத்துள்ளார். பல காட்சிகள் சிறைக்குள்ளே சுழல்வது அயர்பை ஏற்படுத்துகிறது. குறை. படத்தின் நீளத்தை சற்று குறைத்து இருக்கலாம். சிறைக்குள் சுரங்கம் தோண்டி தப்பிக்கும் காட்சிகளில் பார்வையாளர்களை சீட் நுனியில் அமர வைத்துள்ளது. பிரியேஸ் குருசாமியின் ஒளிப்பதிவு சிறப்பாக இடம்பெற்றுள்ளது. சாம்.சி.எஸ் பின்னணி இசை படத்திற்கு கூடுதல் பலம். மொத்தத்தில் தக்ஸ் – புது அனுபவம்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!