ஸ்ரீ காளஹஸ்தி சிவன் கோவிலில் பிரபல பாடகியை வைத்து படப்பிடிப்பு.. விதியை மீறியதாக பக்தர்கள் எதிர்ப்பு..

ஆந்திர மாநிலம், ஸ்ரீகாளஹஸ்தி கோவில் நாட்டிலேயே பிரசித்தி பெற்ற பரிகார சிவ ஸ்தலமாக விளங்கி வருகிறது. தோஷம் நீங்குவதற்காக தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பரிகாரம் செய்து வருகின்றனர். கோவிலுக்குள் கேமரா செல்போன் மற்றும் எலக்ட்ரானிக் உபகரணங்களை எடுத்துச் செல்ல அனுமதி இல்லை. இந்த நிலையில் காளஹஸ்தி சிவன் கோவிலின் மகிமையை வெளிப்படுத்தும் விதமாக கடந்த 15 நாட்களுக்கு முன்பு தேவஸ்தானம் சார்பில் பிரபல பாடகி மங்கிலியை வைத்து பாடல் படமாக்கப்பட்டது. இந்த பாடல் காட்சிகள் சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்யப்பட்டது.

இந்தியா மட்டுமல்லாது ஆஸ்திரேலியா, அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் வசிக்கும் சிவ பக்தர்கள் இந்த பாடலை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். ஆகம விதிகளின்படி கோவிலுக்குள் கேமரா, செல்போன் உள்ளிட்டவை கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்பட்ட நிலையில் இந்தப் பாடல் காட்சியை நடராஜர் சாமி சிலை, அம்மன் சன்னதி, கால பைரவ சாமி ஸ்படிகல் லிங்கம், ராகு கேது பூஜை நடைபெறும் மண்டபம் உள்ளிட்ட இடங்களில் படமாக்கப்பட்டுள்ளது.

கருவறையில் செல்வதற்கு அர்ச்சகர்களுக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் நவீன சிவன் சிலைகளை கொண்டு வந்து ஜல அபிஷேகம் செய்வது பூஜைகள் செய்வது படமாக்கப்பட்டுள்ளது.கேள்விக்குரியதாக உள்ளது. இந்த பாடலை படமாக்க தேவஸ்தான அதிகாரிகள் எப்படி அனுமதி வழங்கினார்கள். இதனால் தரிசனத்திற்கு வந்த பக்தர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

எனவே இதுகுறித்து விளக்கம் அளிக்க வேண்டுமென பக்தர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசுகள் மாறலாம், ஆட்சியாளர்கள் மாறிக்கொண்டே தான் இருக்கிறார்கள். ஆனால் மதம் சம்பந்த அமைப்புகள் தர்மம் மாறாமல் பாதுகாக்க வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினரும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!