காலேஜ் ரோடு – விமர்சனம்

சென்னையில் உள்ள ஒரு மிகப்பெரிய கல்லூரியில் முதலாமாண்டு மாணவராக பயணத்தை தொடங்குகிறார் லிங்கேஷ். இவருக்கு சைபர் துறையில் ஆர்வம் அதிகமாகவுள்ளது. இந்த ஆர்வத்தால் ஒரு ப்ராஜெக்ட்டை கண்டுபிடிக்கும் லிங்கேஷ், அதன்மூலம் வங்கிகளின் பாதுகாப்பை மேன்மைப்படுத்தும் வகையில் உருவாக்கியுள்ளார். இதனை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த முயற்சிக்கும் நிலையில், மற்றொருபுறம் சென்னையின் முக்கிய வங்கிகளில் கொள்ளை நடக்கிறது. இதனிடையில் அதே கல்லூரியில் படிக்கும் நாயகி மோனிகாவுடன், முதல் சந்திப்பிலேயே காதல் வசப்படுகிறார்.

இதற்கான விசாரணைகள் நடத்திய பிறகு இதில் லிங்கேஷ்க்கும் தொடர்புள்ளதாக குற்றம் சாட்டப்படுகிறது. இதில் சிக்கிக் கொள்ளும் லிங்கேஷ் எப்படி தன்னை நிரபராதி என்று நிருபிக்கிறார்? இதில் இவரை சிக்க வைக்க காரணம் என்ன? வங்கிக் கொள்ளைக்கான காரணம் என்ன? கல்வி எப்படியானவர்களின் கைகளில் சிக்கியுள்ளது? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகனாக நடித்திருக்கும் லிங்கேஷ் அவரின் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டை பெறுகிறார். உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு அவரது இயல்பான நடிப்பு மேலும் அழுத்தம் கொடுக்கிறது. கதாநாயகியாக வரும் மோனிகாவின் பாத்திரம் சிறியது என்றாலும் அவர் வேலையை சிறப்பாக செய்துள்ளார்.

லிங்கேஷின் நண்பர்களாக வரும் கதாப்பத்திரங்களின் தேர்வு சிறப்பு. கல்லூரி நண்பராக வருபவர்களின் நடிப்பு இயல்பாகவுள்ளது. நண்பராக வரும் ஆனந்த் நாக், அவருடைய காதலியாக வரும் பொம்முலட்சுமி கொடுத்த வேலையை சரியாக செய்துள்ளனர். மேலும் குணச்சித்திர வேடங்களில் வரும் அக்சய் கமல், நாடோடிகள் பரணி, மெட்ராஸ் வினோத், அருவி பாலா ஆகியோரின் பங்களிப்பு கவனம் பெறுகிறது.

கல்லூரி பின்னணியில் கிரைம், திரில்லர் என ஆக்ஷன் படம் கொடுத்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறார் இயக்குனர் ஜெய் அமர்சிங். படத்தின் சில காட்சிகள் மெதுவாக நகர்வது பலவீனம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம். கல்வி சாமானியர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதை சமூக அக்கறையோடு பதிவு செய்ய முயற்சித்திருக்கிறார்.

காலேஜ் வாழ்கையை எதார்த்தமாக காட்சிப்படுத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர் கார்த்திக் சுப்ரமணியம். படத்திற்கு பின்னணி இசை கூடுதல் பலமாக அமைந்துள்ளது. கதைக்கேற்க இசையமைத்து பாராட்டுக்களை பெறுகிறார் இசையமைப்பாளர் ஆப்ரோ. மொத்தத்தில் காலேஜ் ரோடு – எதார்த்தம்.



  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!