அவதார் 2 – விமர்சனம்

முதல் பாகத்தில் பண்டோரா எனும் கிரகத்தில் நாவி எனும் இனம் வாழ்ந்து வருகிறது. இவர்கள் இடத்தை கைப்பற்ற நாயகன் ஜேக், நாவிகளாகவே உருமாறி அவர்களுடைய வாழ்வியலையும் கற்றுக்கொண்டு செல்கிறார். அப்போது கதாநாயகி நெய்டிரி மீது ஜேக்கு காதல் ஏற்பட்டு பண்டோரா கிரகத்திலேயே தங்கி விடுகிறார்.   இதனை அறிந்து கொண்ட ராணுவம் பண்டோரா கிரகத்தின் மீது தாக்குதலை ஏற்படுத்துகிறார்கள். நாயகன் ஜேக் நாவி படைகளுடன் இணைந்து ராணுவ படைகளை எதிர்த்து போராடி வெற்றி பெறுகிறார். இது முதல் பாகத்தில் நடக்கும் இதன் தொடர்ச்சியாக இரண்டாம் பாகம் கதை நகர்கிறது.  

பண்டோரா கிரகத்தில் நாவிகளுடன் வாழ்ந்து வரும் ஜேக், நெய்டிரியை திருமணம் செய்து குழந்தைகளுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். இந்த சமயத்தில் மீண்டும் பண்டோராவில் மனிதர்களுடைய கால் தடம்படுகிறது. இந்த முறை பண்டோராவில் புதிய உலகத்தை உருவாக்க வேண்டும் என்று ராணுவம் மிகப்பெரிய படையுடன் புறப்பட்டு வருகிறது. முதல் பாகத்தில் மனிதனாக இறந்து போன கர்னல் குவாரிச் தன்னுடைய நினைவுகளை சீப் மூலம் ஸ்டோர் செய்து நாவி உடலில் புகுந்து மீண்டும் ஜேக்கை பழிவாங்க வருகிறார்.  

இதை அறிந்துக் கொண்ட ஜேக் பண்டோராவில் இருந்தால் தன்னுடைய மனைவி, மகன்கள், மகள்களை இழந்து விடுவோம் என்று தன்னுடைய அரச பட்டத்தை வேறொருவருக்கு கொடுத்துவிட்டு பண்டோராவிலிருந்து வெளியேறி கடல்வாசி நாவிகளிடம் தஞ்சம் கேட்டு செல்கிறார். கர்னல் குவாரிச் மற்றும் ராணுவம், ஜேக் இடத்தை தேடி அலைகிறார்கள்.   இறுதியில் குவாரிச் மற்றும் ராணுவம், ஜேக் இடத்தை கண்டுபிடித்தார்களா? ஜேக் தன் குடும்பத்தை காப்பாற்றினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

13 ஆண்டுகளுக்கு முன்னர், புதியதொரு உலகத்துக்கு நம்மை அழைத்துச் சென்ற ஜேம்ஸ் கேமரூன், தற்போது கடலுக்கு அடியில் புதிய உலகை காண்பித்து இருக்கிறார். படத்தில் வரும் நாவிகளை அருமையாக வடிவமைத்து இருக்கிறார். குறிப்பாக, கடல் நாவிகளாக வருபவர்களுக்கு வித்தியாசம் காண்பித்து இருப்பது சிறப்பு. கதாநாயகன் கதாநாயகி இருவரும் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் சிறப்பாக நடித்து இருக்கிறார்கள்.

கிராபிக்ஸ், எமோஷனல், கதைக்களம் என்று படத்திற்கு தேவையான அனைத்தையும் கொடுத்து மிரட்டி இருக்கிறார் இயக்குனர். முதல் பாகத்தை போல இரண்டாம் பாகத்தையும் பிரமிப்பில் ஆழ்த்தி இருக்கிறது. விஷுவல், வி எப் எக்ஸ் மற்றும் அனிமேஷன் குழுவிற்கு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம். பின்னணி இசை படத்திற்கு பெரிய பலமாக அமைந்துள்ளது. மொத்தத்தில் அவதார் 2 ஆச்சரியம்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!