நாய் சேகர் ரிட்டன்ஸ் – விமர்சனம்

படத்தில் கடத்தல்காரர்களாக ஆனந்த்ராஜும் வடிவேலுவும் இருக்கிறார்கள். இதில் ஆனந்த் ராஜ் பெண்களை கடத்துகிறார். வடிவேலு பணத்திற்காக விலையுயர்ந்த நாய்களை கடத்துகிறார். அப்போது எதிர்பாராதவிதமாக ஆனந்த் ராஜின் நாயை வடிவேலு கடத்திவிடுகிறார். இதையறிந்த ஆனந்த் ராஜ் வடிவேலுவை மிரட்டுகிறார். இதுஒருபுறம் இருக்க மறுபுறம் வடிவேலு தங்கள் குடும்பத்தில் ஒரு நாய் இருந்ததாகவும் அந்த நாயின் மூலம் தங்கள் குடும்பம் வளர்ச்சியடைந்ததையும் ஒரு கட்டத்தில் அந்த நாய் தொலைந்துவிட்டதையும் தன் பாட்டி மூலம் தெரிந்து கொண்டு அதை மீட்கும் முயற்சியில் இறங்குகிறார். இறுதியில் ரவுடியான ஆனந்த் ராஜின் சிக்கலில் இருந்து வடிவேலு தப்பித்தாரா..? தன்னுடைய தொலைந்து போன நாயை மீட்டாரா..? இல்லையா..? என்பதே படத்தின் மீதிக்கதை.

நீண்ட வருடங்களுக்குப் பிறகு ஹீரோவாக என்ட்ரி கொடுத்திருக்கும் வடிவேலு தன் வழக்கமான காமெடி கவுண்டர்களாலும் உடல் மொழியாலும் படம் முழுவதும் திகட்ட திகட்ட சிரிப்பை வாரி வழங்கியிருக்கிறார். தன் நடிப்பாலும் வசனங்களாலும் தான் ஒரு காமெடி கலைஞன் என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் வடிவேலு.

ஆனந்த் ராஜ், முனிஷ்காந்த், ஷிவாங்கி, ஷிவானி நாராயணன், ரெடின் கிங்ஸ்லி என அனைத்து கதாபாத்திரங்களும் சிறப்பான நடிப்பை கொடுத்து கதையை போர் அடிக்காமல் கொண்டு செல்ல உதவியிருக்கிறார்கள். நாய்களை கடத்தி பணக்காரனாக நினைக்கும் நாயகன் என்ற ஒரு சாதாரண கதையை மையமாக வைத்து திரைக்கதை முழுவதும் காமெடி பட்டாசுகளை தெரிக்கவிட்டுள்ளார் இயக்குனர் சுராஜ்.

வடிவேலுவின் திறமைகளை கச்சிதமாக பயன்படுத்தியுள்ளார். முதல் பகுதியில் சற்று தொய்வை ஏற்படுத்தினாலும் இரண்டாம் பகுதி ரசிக்கும் படியாக அமைந்துள்ளது. சந்தோஷ் நாராயணன் பின்னணி இசை படத்தை மேலும் ஜாலியாக நகர்த்தியுள்ளது. பாடல்கள் அனைத்தும் ரசிக்க வைத்துள்ளது. விக்னேஷ் வாசு ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் ரசிகர்களை கவர்ந்துள்ளது. மொத்தத்தில் ‘நாய் சேகர் ரிட்டன்ஸ்’ – காமெடி சரவெடி


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!