மஞ்சக்குருவி – விமர்சனம்

தமிழக்கத்தில் உள்ள கும்பகோணம் பகுதியில் மிகப்பெரிய ரவுடி தாதாவாக வலம் வருகிறார் கிஷோர். இவருக்கு தொழில் கற்றுக் கொடுத்த குரு மாஸ்டர் ராஜநாயகம், தன்னை மீறி ரவுடிசம் செய்வதால் கிஷோரை தீர்த்துக்கட்ட திட்டம்தீட்டி நேரம் பார்த்துக் கொண்டிருக்கிறார்.   மறுபுறம் கிஷோரின் ரவுடிசம் பிடிக்காமல் அவருடைய தங்கை நீரஜா அவருடன் சண்டையிட்டு வீட்டை விட்டு வெளியேறி தனது சித்தப்பா வீட்டிற்கு சென்று விடுகிறார்.

நீரஜாவை காதலிக்கும் அந்த ஊர் இளைஞன் விஷ்வாவிற்கு அண்ணன், தங்கை இடையிலான பிரச்சனை தெரிய வருகிறது.   இதனால் நீரஜாவின் காதலை பெறுவதற்காக அவருடைய அண்ணனை நல்லவனாக மாற்றும் முயற்சியில் இறங்குகிறார். இதனை முயற்சி செய்து முழுமையடைவதற்குள் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதன்பின்னர் அண்ணன் தங்கை மீண்டும் ஒன்று சேர்ந்தனரா? விஷ்வா எடுத்த முயற்சிகள் வெற்றி பெற்றதா? விஷ்வாவின் காதல் கை கூடியதா? மாஸ்டர் ராஜநாயகம் கிஷோர் மீதான தனது பழியை தீர்த்துக் கொண்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.  

தாதா கதாப்பாத்திரத்தில் இயல்பாக நடித்து பாராட்டுக்களை பெறுகிறார் கிஷோர். இவரின் எதார்த்த நடிப்பில் மூலம் பாசக் காட்சிகளில் கைத்தட்டல் பெறுகிறார். அவர் கொஞ்சம் கொஞ்சமாக மனம் மாறும் காட்சிகள் நெகிழ வைக்கின்றன.   கதாநாயகனாக நடித்துள்ள விஷ்வா, காதல் காட்சிகளில் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இருந்தும் புதுமுக நடிகர் என்ற இயல்பு தன்மை வெளிப்படையாக தெரிகிறது.  

கதாநாயகி நீரஜா அலட்டல் இல்லாத பாந்தமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். கிளைமாக்ஸ் காட்சியில் எதிராபத அதிர்ச்சியையும் நமக்கு கொடுத்து விடுகிறார். பஸ் கண்டக்டராக நடித்துள்ள கஞ்சா கருப்பு காட்சிகளை கலகலப்பாக நகர்த்திச்செல்ல உதவியிருக்கிறார்.   விஷ்வாவின் நண்பனாக வரும் பசங்க பாண்டி நீரஜாவின் சித்தப்பாவாக வரும் பசங்க சிவகுமார் கதாப்பாத்திரத்தின் சிறந்த தேர்வு. குறிப்பாக தாதாவாக வரும் மாஸ்டர் ராஜநாயகம் அவரின் பணியை சிறப்பாக செய்துள்ளார்.  

அண்ணன் தங்கை பாசம், ரவுடியிசம், இளம் பருவ காதல் என இந்த மூன்று விஷயங்களையும் மையப்படுத்தி முக்கோணமாக இந்த கதையை நகர்த்தி சென்றுள்ளார் இயக்குனர் அரங்கன் சின்னத்தம்பி. ரவுடியிசம் என்பது இருபக்கமும் கூர்மையான கத்தியை போன்றது. அது தன்னை மட்டும் அல்லாது தன்னை சுற்றியுள்ளவர்களின் வாழ்க்கையையும் எப்படி பாதிக்கிறது என்பதை உணர்வுபூர்வமாக மாற்றியுள்ளார். மொத்தத்தில் மஞ்சக்குருவி – பார்க்கலாம்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!