நவரசா ஆந்தாலஜி – பாயாசம் விமர்சனம்

நடிகர் நடிகர் இல்லை
நடிகை அதிதி பாலன்
இயக்குனர் கே.வசந்த்
இசை ஜஸ்டின் பிரபாகரன்
ஓளிப்பதிவு சத்யன் சூரியன்
டெல்லி கணேஷும், ரோகினியும் கணவன் – மனைவி. இவர்களது மகளாக அதிதி பாலன். திருமணமான 3 மாதங்களில் கணவரை இழந்து விதவை ஆகி விடுகிறார் அதிதி பாலன். மகளின் நிலைமையை நினைத்து தவித்து வருகிறார் டெல்லி கணேஷ். இந்த சமயத்தில் டெல்லி கணேஷின் அண்ணன் பேத்திக்கு திருமணம் நடக்கிறது.

தன் அண்ணன் குடும்பம் சந்தோஷமாக இருக்கக் கூடாது என்ற மனநிலையில் இருக்கும் டெல்லி கணேஷ், அந்த திருமணத்தில் வேண்டா வெறுப்புடன் கலந்து கொள்கிறார். இதையடுத்து என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

டெல்லி கணேஷ், அதிதி பாலன், ரோகிணி ஆகியோரின் எதார்த்தமான நடிப்பு படத்திற்கு பிளஸ். விதவையாக நடித்திருக்கும் அதிதி பாலன், கதாபாத்திரத்தின் தன்மை உணர்ந்து நேர்த்தியாக நடித்துள்ளார். அவருக்கு கொஞ்சம் கூடுதல் காட்சிகள் வைத்திருக்கலாம். ஒரு கிராமத்து முதியவராக நடித்துள்ள டெல்லி கணேஷ், அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்து இருக்கிறார்.

அருவருப்பு என்ற உணர்வை மையமாக வைத்து இந்த படத்தை எடுத்துள்ளார் இயக்குனர் வசந்த். 1960-களில் நடப்பது போன்று திரைக்கதையை அமைத்துள்ளார். 30 நிமிட குறும்படத்துக்காக அவரின் மெனக்கெடல் ஒவ்வொரு பிரேமிலும் தெரிகிறது. மெதுவாக நகரும் திரைக்கதை சற்று தொய்வை ஏற்படுத்துகிறது.

ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசையும், சத்யன் சூரியனின் ஒளிப்பதிவு படத்திற்கு வலுசேர்த்திருக்கிறது. குறிப்பாக படத்திற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட லொகேஷன்கள் மிக அருமை. ஒவ்வொரு காட்சிகளிலும் ஒளிப்பதிவாளரின் நேர்த்தி மற்றும் துல்லியம் தெரிகிறது.

மொத்தத்தில் ‘பாயாசம்’ தித்திப்பில்லை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!