பவுடர் – விமர்சனம்

நாளை வேட்பு மனு தாக்கல் செய்ய இருக்கும் எம்எல்ஏ-வை ஒரு கும்பல் கொலை செய்கிறது. மேக்கப் மேனாக இருக்கும் விஜய்ஸ்ரீஜி தன் மகன் ஸ்கூல் பீஸ் கட்ட வழியில்லாமல் பணத்திற்காக கொலை பழிக்கு ஆளாகிறார். கமிஷனர் வீட்டில் ஒருவர் தொலைந்து போக அதைப்பற்றி விசாரிக்க ஆணையிடுகிறார். தன் மகள் அனித்ராவை ஏமாற்றி கர்ப்பமாக்கிய காதலனை கொலை செய்கிறார் தந்தை வையாபுரி. நாளை காலை திருமணம் நடைபெற இருக்கும் நிலையில், தன்னை ஆபாசமாக படம் எடுத்து மிரட்டும் நபரை சந்திக்க செல்கிறார் வித்யா பிரதீப்.

இதற்கிடையில் இரவில் திருடும் கும்பல், காதலர்களின் ரொமான்ஸ் என அனைத்தும் ஒரு இரவில் நடக்கிறது. இதில் நாயகனாக இருக்கும் நிகில் முருகனுக்கு பிறந்த குழந்தையை பார்க்க முடியாமல் பணியில் அமர்த்துகிறார்கள். நள்ளிரவில் நடக்கும் இந்த சம்பவங்கள் காலையில் அவர்களுக்கு எப்படிப்பட்ட நாளாக மாறியது என்பதே படத்தின் மீதிக்கதை. படத்தில் நாயகனாக நடித்திருக்கும் நிகில் முருகன், ராகவன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். உடல் மொழி, வசனம் என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார்.

புதுமுக நடிகர் போல் இல்லாமல் நடித்திருப்பது சிறப்பு. தந்தை கதாபாத்திரத்தில் நடித்து கைத்தட்டல் வாங்கி இருக்கிறார் வையாபுரி. இவருடைய அனுபவ நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. மணப்பெண்ணாக வரும் வித்யா பிரதீப், பரிதவிப்பு, அழுகை, கோவம் என நடிப்பில் வித்தியாசம் காண்பித்து இருக்கிறார். பரட்டை கதாபாத்திரத்தில் நடித்து பலருடைய கவனத்தை ஈர்த்து இருக்கிறார் இயக்குனர் விஜய் ஶ்ரீஜி. இவரது ஆர்ப்பாட்டம் இல்லாத நடிப்பு, பரிதாபத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

கிளைக்கதைகளை சரியாக ஒருங்கிணைத்திருப்பது சிறப்பு. அனித்ரா நாயர், ஆதவன், மொட்டை ராஜேந்திரன், சாந்தினி ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். லியாண்டர் லீ மார்ட்டி இசையில் பாடல்களும் பின்னணி இசையும் ரசிக்க வைத்திருக்கிறது. ராஜா பாண்டி மற்றும் பிரஹத் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம். படம் முழுவதும் இரவில் நடப்பதால் அதற்காக மிகவும் மெனக்கெட்டு இருக்கிறார்கள். மொத்தத்ததில் பவுடர் பூசலாம்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!