பனாரஸ் – விமர்சனம்

கதாநாயகன் ஜையீத்கான் செல்வந்தர் குடும்பத்தின் மகன். இவர் கல்லூரியில் படித்து வருகிறார். கதாநாயகி சோனல் பொற்றோரை இழந்த பெண் எளிதில் அனைவரையும் நம்பிவிடும் குணம் கொண்டவர். ஜையீத்கான் திடீரென ஒரு நாள் நான் தான் உன் கணவர் எதிர்காலத்தில் இருந்து வருகிறேன். நமக்கு ஒரு மகள் இருக்கிறாள் இதை யாரிடமும் சொல்லாதே என்று சோனலிடம் பொய் சொல்கிறார்.  இதை நம்பும் சோனல், ஜையீத்கானை தன் அறையில் தங்க இடம் தருகிறாள். அப்போது ஜையீத்கான், சோனலுடன் நெருக்கமாக இருப்பது போன்று புகைப்படம் எடுத்து தனது நண்பர்களுக்கு அனுப்புகிறார்.

இந்த புகைப்படம் வைரலாகவே சோனல் அவமானத்தில் பனாரஸிற்கு சென்று விடுகிறார்.  ஒரு கட்டத்தில் தான் செய்தது தவறு என்று உணர்ந்த ஜையீத்கான் தன் தந்தையின் அறிவுரையை கேட்டு பனாரஸிற்கு சோனலை சந்திக்க செல்கிறார். அங்கு மரண புகைப்பட கலைஞரின் உதவியுடன் சோனலை தேடுகிறார். இறுதியில் ஜையீத்கான் சோனலை கண்டுபிடித்தாரா? அவரிடம் மன்னிப்பு கேட்டாரா? இவரின் மன்னிப்பு ஏற்கப்பட்டதா? என்பதே படத்தின் மீதிக்கதை. அறிமுக நடிகரான ஜையீத் கான் தனது கதாபாத்திரத்தில் இயல்பாக நடித்திருக்கிறார். காதல், ஆக்‌ஷன், எமோஷனல் காட்சிகளில் புதுமுகம் என்று தெரியாத அளவிற்கு நடிப்பை கொடுத்து கைத்தட்டல் பெற்றுள்ளார்.

கதாநாயகியான சோனலின் ஆதரவற்ற காட்சிகள் அவர் மீது நமக்கு அனுதாபத்தை ஏற்படுத்துகிறது.  தன் கதாபாத்திரத்துடன் முழுமையாக பயணித்து ரசிக்கும்படி செய்துள்ளார். இயக்குனர் ஜெயதீர்த்தா காலப்பயணம் என சுவாரசியமாக தொடங்கி காதலையும் அறிவியலையும் கலந்து ஒரு புதிய படைப்பை கொடுத்துள்ளார். காதலுக்காக இவர் பயன்படுத்தியுள்ள டைம்லூப் காட்சிகள் ரசிக்க வைத்துள்ளது. அத்வைதா குருமூர்த்தி ஒளிப்பதிவு காசியில் நாமும் பயணிப்பது போன்ற ஒரு உணர்வை ஏற்படுத்தியுள்ளது. அஜனீஷ் லோக்நாத் இசை படத்திற்கு பலம் சேர்த்துள்ளது. மொத்தத்தில் ‘பனாரஸ்’ – காதல் ஓவியம்


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!