சினிமாத்துறைக்கான உதவிகளை அரசு வழங்கவில்லை – ஆர்.கே.செல்வமணி வேதனை

அறிமுக இயக்குனர் கே.பி.தனசேகரன் இயக்கத்தில் நட்டி நடராஜ் நடித்துள்ள திரைப்படம் ‘குருமூர்த்தி’. இந்த படத்தில் பூனம் பாஜ்வா கதாநாயகியாக நடித்திருக்கிறார். மேலும், ராம்கி, சஞ்சனா சிங், அஸ்மிதா, ரிஷா, ரவிமரியா, ரேகா சுரேஷ், மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கின்றனர்.

ஃபிரண்ட்ஸ் டாக்கீஸ் தயாரிக்கும் இந்த படத்திற்கு சத்யதேவ் உதயசங்கர் இசையமைத்துள்ளார். மேலும், தேவராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். ‘குருமூர்த்தி’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ள நிலையில் இதன் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு இயக்குனர் ஆர்.கே.செல்வமணி கூறியதாவது, “ராஜாவாக இருந்தாலும்கூட அவருக்கும் சின்னச்சின்ன ஆசை இருக்கும். அப்படி இந்தியாவில் முதல் பத்து கேமராமேன்களில் ஒருவராக இருக்கும் நட்டி, நடிப்பின் மீதான காதலால் ஒரு நடிகராக மாறி ஒரு துணை நடிகரைப்போல் எளிமையாக இந்த இடத்தில் அமர்ந்து இருக்கிறார். அதுமட்டுமல்ல, அவர் கதைகளை தேர்வு செய்யும் விதமும் ஒவ்வொரு படத்திற்கும் ஆச்சரியப்படுத்துகிறது.

அந்தவகையில் அவர் தேர்வு செய்ததாலேயே இந்தப் படம் வித்தியாசமான படமாக இருக்கும் என்று உறுதியாகச் சொல்ல முடியும். சினிமாத் துறையை பொறுத்தவரை முதலீடு செய்த பணத்திற்கு லாபம் கூட கிடைக்க வேண்டாம், ஆனால் முதலீடு செய்த பணமாவது திரும்ப வரவேண்டும் அல்லவா..? அரசு இந்தத் துறையை தொழில்துறையாக அறிவித்தது. ஆனால் அதற்கான எந்த உதவிகளும் சினிமாத்துறைக்கு வழங்கப்படவில்லை.

இந்தத் துறை 150 கோடி மக்களை சந்தோஷப்படுத்தும் ஒரு துறை. இந்தத்துறையில் ஓய்வு பெற்ற தொழிலாளர்களுக்கும் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு எந்த உத்தரவாதமும் இல்லை. இதில் நிச்சயம் மாற்றம் வரவேண்டும்.. அதுவரை தொடர்ந்து குரல் கொடுத்து கொண்டு இருப்பது எங்கள் கடமை” என்று கூறினார்.





  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!