காபி வித் காதல் – விமர்சனம்

பிரதாப் போத்தனுக்கு ஸ்ரீகாந்த், ஜீவா, ஜெய், என 3 மகன்களும் டிடி என்ற மகளும் உள்ளனர். இதில் ஶ்ரீகாந்த் திருமணமாகி குழந்தையுடன் இருக்கிறார். டி டி நிறைமாத கர்ப்பிணியாக வீட்டில் இருக்கிறார். ஜீவாவிற்கும் ஜெய்க்கும் ஒரே மேடையில் திருமணம் செய்து வைக்கலாம் என்று பிரதாப் போத்தன் முடிவு செய்கிறார். ஒரு தலையாக காதலிக்கும் அமிர்தாவை விட்டு, பெரிய ஹோட்டல் கனவிற்காக தொழில் அதிபர் மகளான மாளவிகா சர்மாவைதிருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கிறார் ஜெய். ஜீவாவுடன் லிவ்விங் டூ கெதராக வாழ்ந்து வந்த ஐஸ்வர்யா தத்தா, அவரை விட்டு செல்ல, அண்ணன் ஶ்ரீகாந்த்துடன் தகாத உறவில் இருந்த ரைசாவை திருமணம் செய்ய சம்மதம் தெரிவிக்கிறார் ஜீவா.

இந்நிலையில் ஜெய்க்கு அமிர்தா மீது காதல் வர, ஜெய்க்கு நிச்சயம் செய்த மாளவிகா சர்மா மீது ஜீவாவிற்கு காதல் வர, இந்த திருமணம் குழப்பம் அடைகிறது. இறுதியில் யார் யாரை திருமணம் செய்தார்கள்? ஜீவா, ஜெய் இருவருக்கும் ஒரே மேடையில் திருமணம் நடைபெற்றதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் அண்ணன் தம்பியாக நடித்து இருக்கும் ஜீவா, ஸ்ரீகாந்த், ஜெய் ஆகியோர் துள்ளலான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள். ஶ்ரீகாந்த், மனைவியிடம் ஈடுபாடு இல்லாமல் இருப்பது, ரைசாவிடம் சேட்டை செய்வது என்று கவனத்தை ஈர்த்து இருக்கிறார். ஜீவா, காதலித்த பெண், விட்டு சென்ற பின் வருந்துவது, மீண்டும் வேறொரு பெண்ணை காதலிப்பது, தம்பிடம் சண்டை போடுவது என நடிப்பில் ஸ்கோர் செய்து இருக்கிறார். ஜெய், காதலா, கனவா என்று வித்தியாசமான நடிப்பை கொடுத்து இருக்கிறார். டி டி, அமிர்தா ஐயர், ரைசா, சம்யுக்தா, மாளவிகா சர்மா ஆகியோர் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து இருக்கிறார்கள். யோகி பாபு மற்றும் ரெடின் கிங்ஸ்லி ஆகியோர் காமெடியில் கலக்கி இருக்கிறார்கள்.

பிரதாப் போத்தன் அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். காதல், கலாட்டா, கவர்ச்சி, காமெடி என்று தனக்கே உரிய பாணியில் படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் சுந்தர்.சி. கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார். சீரியல் கதை போல் இருந்தாலும், தெளிவாகவும், சுவாரஸ்யமாகவும் திரைக்கதையை நகர்த்தி இருக்கிறார் இயக்குனர். யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ரம் பம் பம் பாடல் தாளம் போட வைக்கிறது. கிருஷ்ணசாமியின் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் கலர்ஃபுல்லாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘காபி வித் காதல்’ ரசிக்கலாம்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!