நித்தம் ஒரு வானம் – விமர்சனம்

சென்னையில் தனது தாய் தந்தையுடன் வாழ்ந்து வரும் அசோக் செல்வன் (பிரபா), சிறு வயதில் இருந்தே தான் உண்டு, தன் வேலையுண்டு என்று யாருடனும் நெருங்கி பழகாமல் 100 சதவீதம் பர்ஃபெக்ட்டா நபராக இருக்கிறார். இவர் படிக்கும் கதை புத்தகத்தில் வரும் கதாப்பாத்திரங்களை தான் என்று நினைத்துக் கொள்வார். 

இதனிடையே தனக்கு நிச்சயிக்கும் பெண்ணை அதிகம் விரும்பும் அசோக் செல்வன் அவளுக்காக நேரத்தை அதிகம் செலவு செய்கிறார். திருமணத்திற்கு முந்தைய நாள், தான் காதலித்த நபர் குறித்து அசோக் செல்வனிடம் கூற அவரும் அதுப்பற்றி தெரிந்துக் கொள்ள விருப்பப்படாமல் கடந்து செல்கிறார். பின்னர் வாழ்க்கை குறித்து அட்வைஸ் செய்ய திருமணத்திற்கு முந்தைய நாள் தான் விரும்பிய காதலனுடன் அசோக் செல்வனுக்கு நிச்சயித்த பெண் சென்றுவிடுகிறார். 

தனது திருமணம் தடைப்பட்டு விட்ட மன அழுத்தத்தில் பாதிக்கப்படும் அசோக் செல்வன் அதிலிருந்து மீண்டு வர மிகவும் சிரமப்படுகிறார். பிறகு அவருடைய குடும்ப மருத்துவரிடம் (அபிராமி) சென்று இதுகுறித்து சொல்ல, அவரும் இதிலிருந்து மீண்டு வர தான் எழுதிய இரண்டு சிறுகதை புத்தகத்தை கொடுத்து படிக்க சொல்கிறார். அவரும் அதனை படிக்க அந்த சிறுகதையில் நடக்கும் இருவேறு சம்பவங்களில் வரும் கதாநாயகனாக தன்னை கற்பனை செய்துக் கொள்கிறார். அந்த இரு காதல் கதையின் இறுதியில் நடந்தது என்னவென்று தெரிவதற்குள் அந்த புத்தகத்தில் இருக்கும் கடைசி பக்கங்கள் இல்லாமல் குழப்பத்தில் மாட்டிக் கொள்கிறார். 

இதற்காக அந்த மருத்துவரிடம் முறையிட அவரும் அந்த சம்பவங்கள் உண்மை என்றும் அவர்களை தேடிச் சென்றால் உனக்கான விடை கிடைக்கும் என்று சொல்கிறார். இதனால் அசோக் செல்வன் அந்த உண்மை கதாப்பாத்திரங்களை தேடி செல்கிறார். அந்த கதைகளில் இறுதியில் என்ன நடந்தது? அசோக் செல்வன் நினைப்பது போன்று பாசிடிவ்வாக நடந்ததா? அல்லது நெகடிவ்வாக நடந்ததா? இறுதியில் வாழ்கையை அவர் எப்படி புரிந்துக் கொள்கிறார்? என்பதே படத்தின் மீதிக்கதை.  

தான் நடிக்கும் படங்களில் வித்யாசனமான கதாப்பாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் அசோக் செல்வனின் நடிப்பிற்கு இந்த படம் சிறப்பு வாய்ந்ததாக அமைந்துள்ளது. மூன்று விதமான கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் அசோக் செல்வன் தனக்கான நடிப்பை இயல்பாக வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துள்ளார்.

கொங்கு தமிழ் பேசும் கதாப்பாத்திரத்தில் கைத்தட்டல் பெறுகிறார். கதாநாயகிகளாக வரும் ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா மூவரும் அவர்களுடைய பணியை சிறப்பாக செய்து முடித்துள்ளனர். குறிப்பாக அபர்ணா பாலமுரளியின் கதாப்பாத்திரமும் அவரின் இயல்பான நடிப்பும் படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

இருவேறு கதையை எடுத்துக் கொண்டு அதனுடன் பயணிக்கும் கதாநாயகன் என்ற மையக்கருவை கொண்டு படத்தை இயக்கியுள்ளார் இயக்குனர் ரா.கார்த்திக். கதையின் நீரோட்டம் ரசிக்கும்படி இருந்தாலும் திரைக்கதை சுவாரசியத்தை கொடுக்கவில்லை. திரைக்கதையில் இயக்குனர் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம். கதையில் இடம்பெறும் காட்சிகள் வெறும் சம்பவங்களாக கடந்து சென்றுவிடுகிறது.

தான் படித்த கதையை பற்றி தெரிந்துக் கொள்ள கதாநாயகன் காட்டும் காரணம் ஏற்றுக் கொள்ளும் படி இல்லை. அபர்ணா பாலமுரளியின் கதாப்பாத்திரத்தை சிறப்பாக வடிவமைத்து ரசிக்க வைத்துள்ளார். இருந்தும் அந்த கதாப்பாத்திரத்தின் நேரத்தை குறைத்திருக்கலாம். படத்தில் பயணிக்கும் இடங்கள் ரசிக்கும் படியாகவும், வித்யாச அனுபவத்தையும் கொடுக்கிறது.

படத்தில் இடம்பெறும் ஒரு சில பாடல்கள் படத்தின் நீரோட்டத்தில் செல்ல வைத்து ரசிக்க வைத்துள்ளார் இசையமைப்பாளர் கோபி சுந்தர். விது அய்யனாவின் ஒளிப்பதிவு அந்த இடங்களுக்கு பார்வையாளர்களை செல்ல வைத்திருக்கிறது. மொத்தத்தில் நித்தம் ஒரு வானம் – பொழியவில்லை.


இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!