ப்ரின்ஸ் – விமர்சனம்

முற்போக்குவாதியான சத்யராஜ் சுதந்திரப் போராட்டத்தில் கொல்லப்பட்ட தன் தாத்தாவின் பெருமையைப் பேசிக் கொண்டிருப்பவர். தெரியாத விஷயங்களையும் தெரிந்தது போல் காட்டிக் கொள்பவர். தன் மகள் சொந்தத்திற்குள் திருமணம் செய்த காரணத்தால் கேலிக்குள்ளாக்கப்பட்ட சத்யராஜ் தன் மகன் சிவகார்த்திகேயனை சாதி, மதம் கடந்து காதல் செய்ய ஊக்குவிக்கிறார்.

சிவகார்த்திகேயன் ஒரு பள்ளியில் ஆசிரியராக வேலை செய்கிறார். இவரது பள்ளியில் எதிர்பாராதவிதமாக நடிகை மரியா ஆசிரியையாக வந்து சேர்கிறார். தனது தந்தையின் லட்சியத்துக்கேற்ற பெண்ணாக வரும் மரியாவும் சிவகார்த்திகேயனும் ஒரு கட்டத்தில் காதலிக்கிறார்கள்.

ஆனால் இந்த காதல் மரியாவின் அப்பாவிற்கு பிடிக்கவில்லை அவர் இவர்களின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவிக்கிறார். மரியாவின் அப்பாவை சிவகார்த்திகேயன் சமாதானப்படுத்தினாரா? இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை

சிவகார்த்திகேயன் வழக்கம் போல் தனக்கான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார். அப்பாவித் தனமான முகபாவனைகள் காதலிப்பது, நடனமாடுவது என அதகளம் செய்துள்ளார். உக்ரைன் நடிகையான மரியா தனது பணியை சிறப்பாக செய்துள்ளார். தமிழ்நாட்டு பாணியில் அவர் குத்தாட்டம் போடும் விதம் ரசிகர்களை கிறங்க வைத்துள்ளது.

அப்பாவாக வரும் சத்யராஜ் நடிப்பில் வழக்கம் போல அசத்தியுள்ளார். தனக்கு தெரியாதது ஒன்றும் இல்லை என்று கூறி கேலிக்குள்ளாக்கப்படும் போது அதற்கான ரியாக்‌ஷன்களை கொடுத்து அசாதாரணமாக நடித்துள்ளார். பிரேம்ஜி, சதீஷ், ராகுல் ஆகியோர் தனக்கான கதாபாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளனர்.

இதில் எங்கே கதை இருக்கிறது என்று எண்ண வைக்கும் ஒரு கதையை காமெடி ஜானரில் ரசிக்கும் படியாக எடுத்து சென்றுள்ளார் இயக்குனர் அனுதீப். பல காட்சிகளில் சிரிக்க வைத்தாலும் ஒரு சில காட்சிகள் வாட்ஸ்அப் குரூப்பில் வரும் காமெடிகளை கோர்த்து காட்சிகளாக்கப்பட்ட உணர்வினை நமக்கு ஏற்படுத்துகிறது.

தமன் இசையில் ஜெசிகா, பிம்பிலிக்கி பிலாப்பி போன்ற பாடல்கள் ரசிகர்களை கவரும் விதமாக அமைந்துள்ளது. இருந்தாலும் இசையில் சற்று தெலுங்கு சாயல் அடிக்கத்தான் செய்கிறது. மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்துள்ளது.

மொத்தத்தில் ‘ப்ரின்ஸ்’ – கொஞ்சம் காதல் கொஞ்சம் காமெடி





  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!