முன் கூட்டியே வெளியாகும் அமீர்கான் திரைப்படம்

ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ (Forrest Gump) திரைப்படத்தை தழுவி பாலிவுட்டில் ‘லால் சிங் சத்தா’ திரைப்படம் உருவாகி சமீபத்தில் வெளியானது. இதில் இந்தி நடிகர் அமீர்கான் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

அத்வைத் சந்தன் இயக்கியிருந்த இந்த திரைப்படம், ஆகஸ்ட் 11-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தை தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிட்டனர். கலவையான விமர்சனங்களை பெற்றாலும் படம் எதிர்பார்த்த அளவிற்கு வசூல் ஈட்டவில்லை. இதற்கு காரணம் ‘பாய்காட் லால் சிங் சத்தா’ என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளத்தில் டிரெண்டானது தான் என்று கூறப்பட்டது.

‘லால் சிங் சத்தா’ படத்தின் நஷ்டத்தை ஈடுகட்ட அமீர்கான் தனது சம்பளத்தை வாங்காமல் விட்டுக் கொடுத்து விட்டதாக தகவல் வெளியானது. சம்பளத்தை வாங்கினால் தயாரிப்பு நிறுவனத்துக்கு பெருமளவு நஷ்டம் ஏற்படும் என்று கருதி தோல்விக்கு தானே பொறுப்பு ஏற்று இந்த முடிவை எடுத்து இருப்பதாக கூறப்பட்டது.

லால்சிங் சத்தா படத்தை விரைவில் ஓ.டி.டியில் வெளியிட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுவாக இந்தி படம் திரைக்கு வந்து 6 மாதங்களுக்கு பிறகே ஓ.டி.டி.யில் வெளியிடுவது வழக்கமாக உள்ளது. ஆனால் தியேட்டரில் வெளியாகி தோல்வியை சந்தித்த லால்சிங் சத்தா படத்தை மட்டும் முன்கூட்டியே ஓ.டி.டியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!