என் படத்தை புறக்கணிக்காதீர்கள் – நடிகர் அமீர்கான் உருக்கம்

ஹாலிவுட்டில் கடந்த 1994-ம் ஆண்டு வெளியான ‘ஃபாரஸ்ட் கம்ப்’ (Forrest Gump) திரைப்படம் சர்வதேச அளவில் சினிமா ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. அதில் நடிகர் டாம் ஹாங்க்ஸ் முன்னனி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அமெரிக்க வரலாற்றில் நடந்த முக்கிய நிகழ்வுகளின் அடிப்படையில், கற்பனை கலந்து திரைக்கதை உருவாக்கப்பட்டிருந்தது. அந்த திரைப்படத்தை தழுவி தற்போது பாலிவுட்டில் ‘லால் சிங் சத்தா’ என்ற திரைப்படம் உருவாகி உள்ளது.

இதில் டாம் ஹாங்ஸ் நடித்த கதாபாத்திரத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்துள்ளார். மேலும் கரீனா கபூர், நாக சைத்தன்யா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். நடிகர் ஷாருக்கான் கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார். அத்வைத் சந்தன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், வரும் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே சமீப காலமாக ‘பாய்காட் லால்சிங் சத்தா’ #boycottLaalSinghChaddha என்ற ஹேஷ்டேக் சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகி வருகிறது. இந்நிலையில் ‘லால் சிங் சத்தா’ படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் இது குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது இதற்குப் பதிலளித்த அமீர் கான், “நான் இது குறித்து உண்மையில் வருத்தப்படுகிறேன். இப்படியான பிரச்சாரத்தை பரப்பும் சிலர், இதயப்பூர்வமாக நான், நாட்டை நேசிக்கவில்லை என நம்புகிறார்கள் என நினைக்கிறேன்.

ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது. அப்படி இல்லை. நான் நாட்டை மிகவும் நேசிக்கிறேன். தயவுசெய்து என் படத்தைப் புறக்கணிக்காதீர்கள். தயவு செய்து என் படத்தை பாருங்கள்” என தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!