பன்னிக்குட்டி – விமர்சனம்

வாழ்கையில் பல கஷ்டங்களையும் பிரச்சனைகளையும் சந்திக்கும் இளைஞன் உத்ராவதி (கருணாகரன்). குடியில் மூழ்கியிருக்கும் தந்தையுடனும், கணவருடன் சண்டையிட்டு தாய்வீட்டிலேயே தங்கியிருக்கும் தங்கையுடனும் உத்ராவதி வாழ்ந்து வருகிறார்.

இதனிடையே இவரின் காதல் கைக்கூடாத விரக்த்தியில் கருணாகரன் தற்கொலைக்கு முயல்கிறார். அச்சமயம் அவரை சிலர் காப்பாற்றி, பிரச்சினைகளுக்கு தீர்வு காண சாமியாரிடம் அழைத்துச் செல்கின்றனர். அவர் சென்ற பைக் ஒரு பன்னிக்குட்டி மீது மோதி விடுகிறது. இதனால் கெட்ட சகுனம் என்று சாமியார் சொற்படி பரிகாரம் பெற மீண்டும் அந்த பன்னிக்குட்டியை தேடுகிறார்.

இதனிடையே யோகிபாபு பன்னிக்குட்டி மீது தூசு படமால் பத்திரமாக வளர்த்து வருகிறார். ஊருக்குள் பன்றிக் காய்ச்சல் பரவ அதிலிருந்து அந்த பன்னிக்குட்டியை காப்பாற்ற யோகிபாபு முயற்சிக்கிறார். அந்த சாமியார் என்ன சொன்னார்? அந்த பன்னிக்குட்டி என்ன ஆனது? உத்ராவதி வாழ்வில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்கெல்லாம் தீர்வு கிடைத்ததா? என்பதே படத்தின் மீதி கதை.

‘கிருமி’ படத்தை இயக்கியிருந்த அனுசரண் இப்படத்தை இயக்கி இருந்ததால் படத்தின் மீது எதிர்ப்பார்ப்பு இருந்தது. அதனை பூர்த்தி செய்ய இயக்குனர் முயற்சித்துள்ளார். நகைச்சுவை படமாக உருவாகி இருக்கும் இப்படம் ரசிகர்கள் கொண்டாடும் படி வடிவமைத்துள்ளனர். படத்தில் சில சறுக்கல்கள் இருந்தாலும் படம் அதன் நீரோட்டத்தில் பயணிக்கின்றது. திரைக்கதை ஸ்வாரசியமாக இல்லாததால் இன்னும் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம்.

கிராம பின்னணியில் நடக்கும் கதை என்பதால் அதனை எதார்த்தமாக எடுத்துக் கொடுத்திருக்கிறார். உத்ராவதி என்ற கதாப்பாத்திரத்தில் வரும் கருணாகரன், அவரின் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி அனைவரின் பாராட்டுக்களையும் பெற்றுள்ளார். கிராமத்து இளைஞன் கதாப்பாத்திரத்தை கச்சிதமாக நடித்திருக்கிறார். அப்பாவியாக தோன்றும் இடங்களில் அவரின் நடிப்பு மூலம் சோகத்தை பார்வையாளர்கள் மத்தியில் கடத்திவிடுகிறார். திட்டாணியாக நடித்திருக்கும் யோகிபாபு குறைவான காட்சிகளில் வந்தாலும் அவரின் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தி அனைவரையும் கவர்ந்துவிடுகிறார்.

இவருக்கே உரித்தான காமெடி பாணியில் அனைவரையும் சிரிக்கவைத்துள்ளார். ஐ.லியோனி, ராமர், தங்கதுரை, சிங்கம் புலி, டிபி கஜேந்திரன், மாலினி சாத்தப்பன், ஷாதிகா உள்ளிட்ட பலரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

சதீஷ் முருகனின் ஒளிப்பதிவு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. கிராம பின்னணியை மையப்படுத்தியுள்ள படம் என்பதால் அதனை அழகாக காட்சிப்படுத்தியுள்ளார். கிருஷ்ண குமாரின் பின்னணி இசை படத்தின் நீரோட்டத்தில் பயணிக்க வைத்திருக்கிறது. ‘பன்னிக்குட்டி பன்னிக்குட்டி’ என்ற பாடல் படம் முடிந்த பிறகும் நினைவில் நிற்கிறது.

மொத்தத்தில் பன்னிக்குட்டி இன்னும் வளரனும்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!