படைப்பாளன் – விமர்சனம்

சினிமா துறையில் இயக்குனராக வேண்டும் என்ற கனவோடு உதவி இயக்குனராக பணிபுரிந்து வருபவர் ஹீரோ (தியான் பிரபு). அவர் எழுதி வைத்திருக்கும் ஒரு கதையை மனோபாலா தலையிலான தயாரிப்பு நிறுவனத்திடம் சென்று கூறுகிறார்.

தயாரிப்பாளர் இவரின் கதை வேறு ஒரு இயக்குனரிடம் கொடுத்து பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிடுகிறார். இச்சம்பவத்தால் மனமுடைந்துப் போன ஹீரோ, தன் கதையை திருடி விட்டதாக கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்கிறார். இதனால் தயாரிப்பாளர் வழக்கை வாபஸ் பெறவில்லை என்றால் உன்னை கொலை செய்துவிடுவேன் என்று மிரட்டுகிறார். இவரின் மிரட்டலுக்கு ஹீரோ அடிப்பணிந்தாரா? கதை திருட்டிற்கு நீதி கிடைத்ததா? அவர் கதையில் சொன்ன பேய் யார்? இவர் நினைத்தபடி படத்தை எடுத்து இயக்குனரானாரா? என்பது படத்தின் மீதி கதை.

சினிமாக்களில் நடக்கும் கதை திருட்டை மையப்படுத்தி படத்தை எடுக்க முயற்சித்திருப்பதற்கு இயக்குனருக்கு பாராட்டுக்கள். திகில் கலந்த படத்தை கொடுக்க நினைத்திருக்கும் தியான் பிரபு திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். விறுவிறுப்பாக நகர வேண்டிய திரைக்கதையில் தொய்வு உள்ளதால் படத்தில் கவனம் செலுத்துவதில் சிக்கலாக உள்ளது. கதை திருட்டை திகிலாக காட்ட நினைத்தது புது முயற்சி. உதவி இயக்குனர் கதாப்பாத்திரத்தில் நடித்திருக்கும் தியான் பிரபு நடிப்பில் சற்று கவனம் செலுத்தியிருக்கலாம். இருந்தும் அவரின் நடிப்பு சில இடங்களில் பாராட்ட வைத்திருக்கிறது.

கதாநாயகிகளாக நடித்திருக்கும் அஷ்மிதா, நிலோபர் எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர். தயாரிப்பாளராக நடித்திருக்கும் மனோபாலாவின் முதிற்சியான நடிப்பு படத்தின் வேகத்தை கூட்டியுள்ளது. காக்கா முட்டை ரமேஷ் – விக்கி உள்ளிட்ட பலரின் நடிப்பு படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது.

வில்லனாக வரும் பாடகர் வேல்முருகன் மற்றும் வளவன் எதார்த்த நடிப்பை வெளிபடுத்தியுள்ளனர். ஒளிப்பதிவாளர் வேல்முருகனின் பங்கு இப்படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்துள்ளது. இரவு நேரக் காட்சியில் தனி கவனம் செலுத்தியிருக்கிறார். பாலமுரளியின் பின்னணி இசை படத்தின் விறுவிறுப்பை கூட்ட முயற்சி செய்துள்ளது.

மொத்தத்தில் “படைப்பாளன்” படைத்திருக்கலாம்.

  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!