ராக்கெட்ரி நம்பி விளைவு விமர்சனம்

இந்திய அறிவியலாளர் மற்றும் இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் முன்னாள் அதிகாரியாக பணியாற்றிய நம்பி நாராயணனின் வாழ்க்கையை மையமாக வைத்து ராக்கெட்ரி நம்பி விளைவு படத்தை இயக்கி இருக்கிறார்கள்.

ராக்கெட் தொழில்நுட்பத்தில் அதீத ஆர்வம் கொண்ட நம்பி நாரயணன், உலகப் புகழ் பெற்ற அமெரிக்கா பல்கலைகழகத்தில் ராக்கெட் தொடர்பான ஆராய்ச்சியை முடிக்கிறார். இதைதொடர்ந்து அவருக்கு அமெரிக்க விண்வெளி ஆய்வு அமைப்பான நாசாவில் பணிபுரிய அவருக்கு வாய்ப்பு கிடைக்கிறது. அதை மறுத்து இந்தியா திரும்பி, இஸ்ரோவில் இணைந்து இந்தியாவின் ராக்கெட் தொழில்நுட்பத்திற்காக பணியாற்றுகிறார்.

இப்படி இருக்கும் நிலையில் நம்பி நாராயணன் மீது தேச துரோக வழக்கு பாய்கிறது. போலீஸ் நம்பி நாராயணனை கைது செய்கிறது. இறுதியில் நம்பி நாராயணன் வாழ்க்கை என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை. நம்பி நாராயணன் கதாபாத்திரத்தில் மாதவன் நடித்திருக்கிறார் என்று சொல்வதை விட வாழ்ந்து இருக்கிறார் என்றே சொல்லலாம். ஒவ்வொரு காலகட்டத்தில் வெவ்வேறு தோற்றத்தில் நடித்து அசத்தி இருக்கிறார்.

வெளுத்த தாடி, வெளியில் தெரியும் தொப்பை, வசன உச்சரிப்பு, உடல்மொழி என ரசிகர்களை கவர்ந்து இருக்கிறார். மாதவனுக்கு மனைவியாக நடித்திருக்கும் சிம்ரன், ரசிகர்களிடம் கைத்தட்டல் வாங்கி இருக்கிறார். ஒரு காட்சியில் யாரும் எதிர்ப்பார்த்திராத நிலையில், சிம்ரன் நடிக்கும் காட்சி மனதை உலுக்குகிறது. மனமுடைந்துபோவது, அவமானங்களை எதிர்கொள்வது என நடிப்பு திறனை வெளிப்படுத்தியிருக்கிறார்.

சில நிமிடங்களே வந்தாலும் மனதில் பதிந்திருக்கிறார் சூர்யா. இறுதி காட்சியில் தேசத்தின் மனசாட்சியாக பிரதிபலித்திருக்கிறார். மற்ற கதாபாத்திரங்கள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். நடிப்பதுமட்டுமில்லாமல் இப்படத்தை இயக்கி இருக்கிறார் மாதவன். ஒரு விஞ்ஞானியின் கதையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட படமாக மட்டும் பார்க்க முடியவில்லை. மாதவனின் இந்த முயற்சிக்கு பெரிய கைத்தட்டல் கொடுக்கலாம்.

முதல் பாதியில் ராக்கெட் தொழில்நுட்பம், அறிவியல் என திரைக்கதை நகர்வதால் அதிகம் புரிந்துக் கொள்ள முடியவில்லை. இரண்டாம் பாதியில் நம்பி நாராயணின் குடும்ப வாழ்க்கையை படமாக்கி இருப்பது சிறப்பு. சென்டிமென்டாக உருவாக்கப்பட்டுள்ள இரண்டாம் பாதி ரசிகர்களை சீட்டில் உட்கார வைத்திருக்கிறது. முதல் பாதியை விட, இரண்டாம் பாதி மனதில் ஒட்டிக்கொள்கிறது.

சிர்ஷா ரே-வின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம். சாம் சிஎஸ்-ன் பிண்ணனி இசையை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. மொத்தத்தில் ‘ராக்கெட்ரி நம்பி விளைவு’ ரசிக்கலாம்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!