நம்பி நாராயணன் தமிழர் என்பது யாருக்கும் தெரியாது – நடிகர் மாதவன்

பிரபல நடிகர் மாதவன் இயக்குனராக அறிமுகமாகியுள்ள திரைப்படம் ‘ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்’. இஸ்ரோ ராக்கெட் விஞ்ஞானி ஸ்ரீ நம்பி நாராயணனின் வாழ்க்கையில் நடந்த உண்மைச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட இந்த திரைப்படத்தை இயக்குவதோடு மட்டுமல்லாமல் அதில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.

சாம் சிஎஸ் பின்னணி இசையமைத்துள்ள இப்படத்திற்கு சிர்ஷா ரே ஒளிப்பதிவு செய்துள்ளார். பிஜித் பாலா படத்தொகுப்பைக் கவனித்துள்ளார். ட்ரைகலர் பிலிம்ஸ், வர்கீஸ் மூலன் பிக்சர்ஸ், 27 இன்வெஸ்ட்மெண்ட்ஸ் நிறுவனங்களால் தயாரிக்கப்பட்டுள்ள இப்படம் ஜூலை 1-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


இதையடுத்து இப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு நடைபெற்றது அதில் இயக்குனர் மாதவன் கூறியதாவது, “விக்ரம் வேதா படம் முடிந்ததும், இஸ்ரோ விஞ்ஞானியின் வாழ்க்கையில் நடந்த உண்மை சம்பவங்களை வைத்து திரைப்படம் எடுக்க கூறி எனது நண்பர் பரிந்துரைத்தார்.

பாகிஸ்தான் ராணுவத்திற்கு தேசிய ரகசியத்தை தெரிவித்ததாக பொய்யாக குற்றம் சாட்டப்பட்டு சிறையில் சித்திரவதை செய்யப்பட்ட அந்த விஞ்ஞானி, சிறையில் இருந்து வெளியே வந்த பிறகு தான் குற்றமற்றவர் என்பதை நிரூபித்தார். அவர் நாகர்கோவிலில் பிறந்த தமிழர் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது என்பதும், நாட்டின் முன்னேற்றத்திற்கு அவர் ஆற்றிய பங்களிப்பு மிகவும் மகத்தானது என்பதும், பொதுமக்களின் பார்வையில் படாமல் இருப்பதும் ஏமாற்றமாக இருந்தது.

அதனால்தான் நான் ‘ராக்கெட்ரி’ தயாரிக்க முடிவு செய்தேன். இப்படம் இந்தியா, பிரான்ஸ், கனடா, ஜார்ஜியா மற்றும் செர்பியா ஆகிய நாடுகளில் படமாக்கப்பட்டுள்ளது. ஃபிலிஸ் லோகன், வின்சென்ட் ரியோட்டா மற்றும் ரான் டோனாச்சி போன்ற புகழ்பெற்ற சர்வதேச நடிகர்களுடன், இந்திய திரையுலகின் முன்னணி நடிகர்களான ஷாருக்கான் மற்றும் சூர்யா ஆகியோர் சிறப்புத் தோற்றங்களில் நடித்துள்ளனர்” என கூறியுள்ளார்.


  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!