மருத – விமர்சனம்

நடிகர் ஜி.ஆர்.எஸ்.
நடிகை லவ்லின் சந்திரசேகர்
இயக்குனர் ஜி.ஆர்.எஸ்.
இசை இளையராஜா
ஓளிப்பதிவு பட்டுக்கோட்டை ரமேஷ்

சரவணனும் ராதிகாவும் அண்ணன் தங்கைகள். ராதிகா மகனின் காது குத்து விழாவிற்கு சரவணன் வீம்பிற்காக அதிகமாக செய்முறை செய்கிறார். பின்னர் சரவணன் வீட்டில் நடக்கும் விழாவிற்கு ராதிகா குடும்பத்தார் செய்முறை செய்யாமல் விடுகின்றனர். இதனால் கோபமடையும் சரவணனின் மனைவி விஜி சந்திரசேகர், ராதிகாவின் கணவர் மாரி முத்துவை அசிங்கப்படுத்த, அவர் தற்கொலை செய்து கொள்கிறார்.

கோபம் தீராத விஜி சந்திரசேகர் செய்முறை பணத்தை ராதிகாவிடம் இருந்து எப்படியாவது பெற்றுவிட வேண்டுமென்று இருக்கிறார். இந்நிலையில் விஜி சந்திரசேகர் மகளும் ராதிகாவின் மகனும் காதலிக்க ஆரம்பிக்கிறார்கள். இறுதியில் விஜி சந்திரசேகர் ராதிகாவிடம் இருந்து செய்முறை பணத்தைப் பெற்றாரா? இல்லையா? ராதிகாவின் மகன், விஜியின் மகள் காதல் என்ன ஆனது? என்பதே படத்தின் மீதிக்கதை.

இப்படத்தை இயக்கியதோடு மட்டுமில்லாமல் நடிக்கவும் செய்திருக்கிறார் ஜி.ஆர்.எஸ். பாரதிராஜாவின் உதவியாளரான இவர், மண் மணம் மாறாமல் அவர் பாணியிலேயே படத்தை இயக்கியிருக்கிறார். கிராமங்களில் திருமண நிகழ்ச்சி, காதுகுத்து நிகழ்ச்சிகளில் நடக்கும் செய்முறையை மையமாக வைத்து படத்தை இயக்கியிருக்கிறார் ஜி.ஆர்.எஸ். இவருடைய நடிப்பு பெரிதாக கை கொடுக்கவில்லை. ஆனால், திரைப்படத்தை இயக்கியதில் கவனிக்க வைத்திருக்கிறார்.


ஜிஆர்எஸ் அம்மாவாக நடித்திருக்கும் ராதிகாவின் நடிப்பு படத்திற்கு பெரிய பலம். அண்ணன் பாசம், தாய் பாசம் என நடிப்பில் பளிச்சிடுகிறார். குறிப்பாக கிளைமாக்ஸ் காட்சியில் உணர்வுபூர்வமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். இவருக்கு இணையாக போட்டி போட்டு நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார் விஜி சந்திரசேகர். இவருடைய மிரட்டலான நடிப்பு ஒரு சில இடங்களில் மிகைப் படுத்தலாக இருக்கிறது.


ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியான நடிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார் சரவணன். மாரிமுத்து மற்றும் நாயகியாக நடித்திருக்கும் லவ்லின் ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். 

செய்முறை ஒன்றை வைத்து மட்டும் திரைக்கதை அமைத்து படத்தை இயக்கியது சாமர்த்தியம். இருப்பினும் படத்தின் முதல்பாதியில் ஜிஆர்எஸ் செய்யும் காமெடி பெரியதாக எடுபடவில்லை. அதுபோல் இரண்டாம் பாதி நீளத்தை குறைத்து இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம். 


இளையராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பட்டுக்கோட்டை ரமேஷின் கேமரா கிராமத்து அழகை அப்படியே படம் பிடித்து இருக்கிறது.


மொத்தத்தில் ‘மருத’ சிறப்பான விருந்து… ஆனால் சுவை குறைவு.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!