சங்கு சக்கரம் – சினிமா விமர்சனம்


குழந்தைகளை கடத்தி அவர்களது பெற்றோரை மிரட்டி பணம் சம்பாதிக்கலாம் என்று திட்டம் போடுகிறார் திலீப் சுப்பராயன். அதன்படி, விளையாட இடமில்லாமல் தவித்து வரும் குழந்தைகளிடம் தனது ஆளை அனுப்பி, ‘தனியாக ஒரு பங்களா இருக்கிறது, அங்கே சென்றால் யாரும் தொந்தரவு செய்யமாட்டார்கள்’ என்று சொல்லி அந்த குழந்தைகளை பேய் பங்களாவுக்கு வர வைக்கிறார்.

மறுபுறத்தில் பல கோடி ரூபாய் சொத்துக்கு சொந்தக்காரனான நிஷேஷ், பாதுகாவலர்கள் மூலம் வளர்கிறான். அவன் பெயரில் இருக்கும் சொத்துக்களை பறிக்க பாதுகாவலர்கள் திட்டமிடுகின்றனர். அவனை அந்த பேய் பங்களாவுக்கு அழைத்து வந்து கொலை செய்துவிட்டு பேய் அடித்ததாக பழியை போட்டுவிடலாம் என்று அழைத்து வருகின்றனர்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

அதேநேரத்தில் அந்த பேய் பங்களாவை விற்று அதனை பிளாட் போட்டு விற்க ரியல் எஸ்டேட் அதிபர் ஒருவர் முடிவு செய்து அந்த பங்களாவுக்கு மந்திரவாதிகளை அழைத்து வருகிறார்.

இவ்வாறாக உள்ளே வரும் குழந்தைகள், நிஷேஷ், திலீப் சுப்பராயன், நிஷேஷின் பாதுகாவலர்கள், ரியல் எஸ்டேட் அதிபர் அனைவரும் உள்ளே மாட்டிக் கொள்கின்றனர். அங்கிருக்கும் பேய் அவர்களை என்ன செய்தது? அந்த குழந்தைகள் எப்படி தப்பித்தார்கள்? திலீப் சுப்பராயன், பாதுகாவலர்கள் என்ன ஆனார்கள்? என்பதே படத்தின் மீதிக்கதை.

மிரட்டும் வில்லனாக நடித்து வந்த திலீப் சுப்பராயன் இந்த படத்தில் ஒரு காமெடி கலந்த வில்லனாக கலக்கியிருக்கிறார். பேய் பங்களாவில் மாட்டிக் கொண்டு தவிக்கும் அவரது கதாபாத்திரம் ரசிக்கும்படி இருக்கிறது. கீதா அழகான பேயாக வந்து மிரட்டுகிறார். நண்பர்கள் ஒரு குழுவாக சேர்ந்தால் எப்படி கலகலப்பாக இருக்குமோ, அதேபோல் குழந்தைகள் ஒன்று சேர்ந்து கலக்கி இருக்கிறார்கள். குறிப்பாக பேயாக நடித்திருக்கும் குழந்தை, பேயாகவே மாறி வியக்க வைக்கிறது.


நிஷேஷின் கதாபாத்திரம் படத்தில் வித்தாசமான ஒன்று. பசங்க படத்தை போலவே, இந்த படத்திலும் கேள்வியாக கேட்டு பேயையே பயந்து ஓட வைக்கிறார். மற்ற கதாபாத்திரங்களும் படத்திற்கு வலு சேர்த்திருக்கின்றனர்.

பணத்தாசை பிடித்தவர்களால் பேய் பங்களாவில் சிக்கிக் கொள்ளும் குழந்தைகள் அந்த இடத்தில் இருந்து எப்படி தப்பித்தார்கள். உலகத்தில் பேயை விட மனிதர்கள் தான் பெரிய பேய். பேயை பார்த்து மனிதர்கள் பயப்படக் கூடாது. பணத்தாசை பிடித்த மனிதர்களை பார்த்து பேய் தான் பயப்பட வேண்டும். எந்த பேயும் காசு, பணத்தை கொள்ளை அடிப்பதில்லை. கொலையும் செய்வதில்லை. மனிதர்கள் தான் அனைத்து தவறுகளையும் செய்து விட்டு அதனை பேய் பெயரில் மறைத்துவிடுகின்றனர் என்பதை எந்த ஒரு காட்சியும் குழந்தைகளை பாதிக்காத வகையில், மது, புகைப்பழக்க காட்சிகள் இல்லாமல் குடும்பத்துடன் பார்க்கும் படமாக கொடுத்திருக்கும் இயக்குநர் மாரிசனுக்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்ளலாம்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

படத்தில் முதல் பாதி மெதுவாக சென்றாலும், இரண்டாவது பாதியில் விறுவிறுப்பு கூட்டியிருப்பதால் ரசிக்க முடிகிறது. இருந்தாலும் முதல் பாதியிலும் காமெடி காட்சிகளை கொஞ்சம் இணைத்திருக்கலாம்.

சபீர் தபாரே அலாமின் மிரட்டும் பின்னணி இசை படத்திற்கு பலத்தை கூட்டியிருக்கிறது. ஜி.ரவி கண்ணனின் ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

மொத்தத்தில் `சங்கு சக்கரம்’ கலகல சக்கரம். – Source: Maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!