83 – விமர்சனம்

நடிகர் ரன்வீர் சிங்
நடிகை தீபிகா படுகோனே
இயக்குனர் கபீர் கான்
இசை பிரிதம்
ஓளிப்பதிவு அசிம் மிஷ்ரா

1983 ஆம் ஆண்டு கபில்தேவ் (ரன்வீர் சிங்) தலைமையிலான அணி உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் கலந்துக் கொள்வதற்காக இங்கிலாந்து செல்கிறது. அங்கு, முதல் சுற்றிலேயே இந்திய அணி வெளியேறிவிடும் என்று பலரும் கூறி வரும் நிலையில், எதிர்பாராதவிதமாக இந்திய அணி வெற்றி பெற்று அரையிறுதிக்குள் செல்கிறது.

இறுதிபோட்டிக்கு செல்வதற்கு இந்திய அணி பல அவமானங்கள் சந்திக்க நேரிடுகிறது. இதைக் கடந்து இறுதியில் கபில்தேவ் தலைமையிலான இந்திய அணி எப்படி உலகக்கோப்பை கைப்பற்றியது என்பதை திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறார்கள்.

கபில்தேவ் கதாபாத்திரத்தில் கச்சிதமாக பொருந்தி இருக்கிறார் ரன்வீர் சிங். உடல் மொழி, விளையாட்டு, சோகம், அவமானம் என தன் திறமையை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். பத்திரிகையாளர்கள் கேட்கும் போது நாங்க ஜெயிப்போம் என்று கூறும்போதும், பேருந்தில் டீம் மீட்டிங் நடத்தும் போதும், வெற்றி பெற்றும் மற்றவர்கள் அதை பெரியதாக பார்க்காத போதும், ரன்வீர் சிங்கின் முகபாவனைகள் ரசிகர்களை கவர்ந்திருக்கிறது.

ரன்வீர் சிங்கின் மனைவியாக வரும் தீபிகா படுகோனே, அவருக்கு ஊக்குவிக்கும் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். சிறிது நேரமே வந்தாலும் ரசிக்கும்படி அவரது கதாபாத்திரம் உள்ளது. மற்ற வீரர்களாக வருபவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ஜீவா, பல இடங்களில் காமெடியில் கலக்கி இருக்கிறார்.

1983ஆம் ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் கபீர் கான். கிரிக்கெட்டர்களின் கனவாக கருதப்பட்டும் லார்ட்ஸ் மைதானத்திற்குள் இந்திய அணி அனுமதி மறுக்கப்படும் போது, 35 வருடங்களுக்கு முன்பு சுதந்திரம் கிடைச்சுது, ஆனால் இன்னும் மரியாதை கிடைக்கவில்லை என்ற வசனம் கேட்கும்போது பார்ப்பவர்களை பரிதாப்பட வைக்கிறது. அதுபோல், ரன்வீர் சிங் சிக்ஸ் அடிக்கும்போது வெளியில் இருந்து கபில்தேவ் பிடிப்பது, தன் விளையாட்டை அமர்நாத் ரசிப்பது மற்றும் திட்டுவது ஆகிய காட்சிகள் ரசிக்க வைக்கிறது.

முன்னாள் கிரிக்கெட் வீரர்களைப் போலவே இருப்பவர்களை தேர்ந்தெடுத்து நடிக்க வைத்ததற்கு பெரிய கைதட்டல். பல காட்சிகள் பார்க்கும்போது நாம் இந்தியர் என்ற உணர்வை கொண்டு வந்திருக்கிறார். 83 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட வீடியோக்களை திரைப்படத்தோடு காட்சிபடுத்தியது சிறப்பாக இருந்தது.

அசிம் மிஷ்ராவின் ஒளிப்பதிவும், ஜூலியஸ் பக்கியத்தின் பின்னணி இசையும் திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது. பிரிதம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம்.
மொத்தத்தில் ‘83’ வரலாறு.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!