உள்குத்து – சினிமா விமர்சனம்


கடலோர மீனவ குப்பத்தில் வாழ்ந்து வருகிறார் பால சரவணன். இவர் ரவுடி போல் தன்னை மிகைப்படுத்தி வருகிறார். இந்த சமயத்தில் பால சரவணனை ஒரு பிரச்சனையில் இருந்து நாயகன் தினேஷ் காப்பாற்றுகிறார். இதிலிருந்து இருவரும் நட்பாக பழகுகிறார்கள். பின்னர் பால சரவணின் வீட்டிலேயே தங்கி விடுகிறார் தினேஷ். பால சரவணனின் தங்கையான நந்திதாவை பார்த்தவுடனேயே காதல் வயப்படுகிறார் தினேஷ்.

அந்த ஊரில் மிகப்பெரிய ரவுடியாக இருக்கிறார் சரத் லோகிதஸ்வா. இவர் மகனாக வரும் திலீப் சுப்ராயனும் அந்த ஊரில் கந்து வட்டி தொழில் செய்து, அனைவரையும் துன்புறுத்தி வருகின்றார். ஒரு நாள் திலீப் சுப்ராயனின் வலது கையாக இருக்கும் ஒருவரை, ஒரு பிரச்சனையில் தினேஷ் அடிக்கிறார். இதனால் திலீப் சுப்ராயனின் பகையை சம்பாதிக்கிறார் தினேஷ். இந்த பகையால் வரும் சண்டையில் திலீப் சுப்ராயனையும் அடித்து விடுகிறார் தினேஷ்.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

இதனால் ரவுடி சரத் லோகிதஸ்வா, தினேஷை கொல்ல நினைக்கிறார். ஆனால், தினேஷ் சமாதானம் பேசி திலீப்பிடம் நண்பராகி விடுகிறார். பின்னர் ஒரு நாளில் திலீப் சுப்ராயனை கொலை செய்து விடுகிறார்.


நட்பாக பழகின திலீப்பை தினேஷ் ஏன் கொலை செய்தார்? அதன் பின்னணி என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து தனது திறமைகளை நிருபித்து வரும் தினேஷ், இந்த படத்திலும் தன்னுடைய திறமையை நிருபித்திருக்கிறார். வலுவான கதாபாத்திரத்தை ஏற்று, கதாபாத்திரத்தை உணர்ந்து கதைக்கு என்ன தேவையோ அதை மிகவும் எதார்த்தமாக செய்திருக்கிறார்.

நாயகியாக நடித்திருக்கும் நந்திதா, கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். அழகான சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். பால சரவணனின் காமெடி பல இடங்களில் கைகொடுத்திருக்கிறது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு திரையில் தோன்றியிருக்கும் சாயா சிங்கின் நடிப்பு அருமை.

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!

படத்திற்கு பெரிய பலம் சரத் லோகிதஸ்வாவின் நடிப்பு. தனக்கே உரிய வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். அதுபோல், இவரது மகனாக வரும் திலீப் சுப்ராயனும் நடிப்பால் மனதில் நிற்கிறார். ஸ்ரீமன், ஜான் விஜய், மொட்டை ராஜேந்திரன், செஃப் தாமோதரன் ஆகியோர் கதையின் ஓட்டத்திற்கு உதவியிருக்கிறார்கள்.


அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து, பழிவாங்கும் கதையாக உருவாக்கி இருக்கிறார் கார்த்திக் ராஜு. கதாபாத்திரங்களை சிறப்பாக தேர்வு செய்திருக்கிறார். படம் ஆரம்பம் முதல் இறுதி வரை திரைக்கதை ஓட்டம் மிகவும் விறுவிறுப்பாக அமைந்தது படத்துக்கு மிக முக்கிய பலம் என்று தான் சொல்ல வேண்டும். இரண்டாம் பாதியில் மட்டும் கொஞ்சம் கதை இழுத்துக் கொண்டே செல்வது போல் இருக்கிறது. தினேஷிடம் திறமையாக வேலை வாங்கி இருக்கிறார் இயக்குநர்.

ஜஸ்டின் பிரபாகரனின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னனி இசையையும் சிறப்பாக கொடுத்திருக்கிறார். வர்மாவின் கேமரா, கடற்கரை பகுதிகளையும், அதை ஒட்டி உள்ள பகுதிகளையும் மிகவும் அழகாக காட்டிருக்கிறது.

மொத்தத்தில் ‘உள்குத்து’ சிறப்பான குத்து. – Source: Maalaimalar

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!