என்னங்க சார் உங்க சட்டம் – விமர்சனம்

நடிகர் கார்த்திக் ஆர் எஸ்
நடிகை சவுந்தர்யா
இயக்குனர் பிரபு ஜெயராம்
இசை குணா பாலசுப்ரமணியம்
ஓளிப்பதிவு அருண் கிருஷ்ணா

இரண்டாம் பாதியில் ஏழை பிராமணர் ஒருவர் டிஎன்பிஎஸ்சி இட ஒதுக்கீட்டில் வேலை கிடைக்காமல் அவஸ்தைப் படுகிறார். அதேநேரம் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் வந்தவுடன் கோயிலில் உள்ள உயர் சாதியினர் மனமுவந்து அவர்களுக்கு வேலை கொடுத்து விடுகிறார்கள்.

அதிலும் உயர்ந்த குலத்தில் உள்ள ஏழைகள் எவ்வளவு கஷ்டப்படுகிறார்கள். ஆனால், வேறு ஜாதியைச் சேர்ந்த பணக்காரர்கள் வேலைகளை பெறுகிறார். உயர் ஜாதி, தாழ்ந்த ஜாதி என்று இட ஒதுக்கீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது. கடைசியில் ஏழைக்கு இட ஒதுக்கீடு கிடைத்ததா? இல்லையா? ஏமாற்றப்பட்டாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் முதல் பாதியில் ஜாதி, மதம், காதல், காமெடி என கலகலப்பாக செல்கிறது. இரண்டாம் பாதியில் ஜாதி ரீதியாக ஏற்படும் இட ஒதுக்கீடு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற கருத்து, கலவரம், சண்டை, பிரச்சனை என்று நகர்கிறது. இதை திறமையாக கையாண்டு இருக்கிறார் இயக்குனர் பிரபு ஜெயராம். முதல் படம் என்று தெரியாதளவிற்கு காட்சியிலும், திரைக்கதையிலும் தெளிவு படுத்தி இருக்கிறார். வேலை இட ஒதுக்கீட்டால் தற்போது ஏற்படும் நிலவரத்தை இயக்குனர் அழகாக சுட்டிக்காட்டி இருக்கிறார். கதாபாத்திரங்களிடையே திறமையாக வேலை வாங்கி இருக்கிறார்.

படத்தில் நாயகன் ஆர்.எஸ்.கார்த்திக் பொறுப்பில்லாமல் பெண்கள் பின்னாடி சுற்றுவது, கேலி செய்வது, கிண்டல் செய்வது, பின் அவர்களை காதலித்து கழட்டி விடுவது என்று இருக்கிறார். இவரது நடிப்பு படத்திற்கு பலமாக அமைந்து இருக்கிறது. படத்தில் நான்கு ஹீரோயின்கள். அனைவரும் தங்களுக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்கள். அனுபவ நடிப்பால் பளிச்சிடுகிறார் ரோகினி.

குணா பாலசுப்ரமணியம் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக ஜெகன் கவிராஜ் எழுதிய ஜீரக பிரியாணி பாடல் தாளம் போட வைக்கிறது. அருண் கிருஷ்ணாவின் ஒளிப்பதிவு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.
மொத்தத்தில் ‘என்னங்கசார் உங்க சட்டம்’ சிறப்பு.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!