மாய நிழல் – விமர்சனம்

நடிகர் குஞ்சகோ போபன்
நடிகை நயன்தாரா
இயக்குனர் அப்பு என் பட்டாத்ரி
இசை சூரஜ் எஸ் குருப்
ஓளிப்பதிவு தீபக் டி மேனன்
மலையாளத்தில் கடந்த சில மாதங்களில் திரையரங்குகளிலும் ஓடிடிகளிலும் பல த்ரில்லர் படங்கள் வெளியாக ஆரம்பித்திருக்கின்றன. அந்த வரிசையில் இந்த நிழல் படத்தையும் வைக்கலாம். ஏற்கனவே திரையரங்கில் வெளியாகி விட்டாலும் தற்போது அமெஸானில் வெளியாகியிருக்கிறது இந்தப் படம்.

நீதிபதியாக இருக்கும் குஞ்சகோ போபன் ஒரு விபத்தில் சிக்குகிறார். இந்த விபத்தால் ஏற்பட்ட மன நல பாதிப்புகளில் இருந்து மீண்டு கொண்டிருக்கும்போது நிதின் என்ற சிறுவனின் அறிமுகம் அவருக்கு கிடைக்கிறது. 6-7 வயதே ஆகும் அந்தச் சிறுவன் கொலை கதைகளைச் சொல்கிறான். அந்தக் கொலைகள் பல ஆண்டுகளுக்கு முன்பாக நடந்தவையாக இருக்கின்றன.

அந்தக் கொலைகள் குறித்து அந்தச் சிறுவனுக்கு எப்படித் தெரிந்தது என்ற புதிரை விடுவிக்க முயல்கிறார் குஞ்சகோ போபன். ஆனால், அதற்குப் பிறகுதான் ஒன்றின் பின் ஒன்றாக பல அதிர்ச்சிகரமான சம்பவங்கள் நடக்கின்றன. இறுதியில் குஞ்சகோ போபன் கொலைகள் பற்றிய புதிரை கண்டுபிடித்தாரா? அதிர்ச்சிகரமான சம்பவங்கள் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக வரும் குஞ்சக்கோ போபனுக்கு எந்த அலட்டலும் இல்லாமல் சிறப்பான நடிப்பை கொடுத்து இருக்கிறார். இவருக்கு அடுத்தபடியாக படத்தில் கலக்கியிருப்பது சிறுவன் நிதினாக வரும் இஸின் ஹஷ். நிதினின் தாய் ஷர்மிளாவாக வரும் நயன்தாராவுக்கு பெரிய சவாலான கதாபாத்திரமில்லை. இருப்பினும் கொடுத்த வேலையை சிறப்பாகவே செய்திருக்கிறார்.

சாதாரணமான ஒரு சைக்கோ திரில்லராகத் துவங்கி, பேய்க் கதையைப் போல மாறி, மீண்டும் சைக்கோ திரில்லராகவே இந்த படம் முடிகிறது. பேய்ப் படங்களில் வருவதைப் போல, ஒன்றிரண்டு திகில் காட்சிகள் வைத்து மிரள வைத்திருக்கிறார்கள். அதே நேரத்தில் அமைதியாக அமர்ந்து ரசிக்கக்கூடிய நல்ல சைக்கலாஜிகல் திரில்லராக படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் அப்பு என்.பட்டாத்ரி.

சூரஜ் எஸ் குருப் இசையும், தீபக் டி மேனனின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.
மொத்தத்தில் ‘மாய நிழல்’ நிஜ திரில்லர்.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!