ஓடிடி-க்கு செல்லும் கீர்த்தி சுரேஷின் ரூ.100 கோடி பட்ஜெட் படம்

மோகன்லால், கீர்த்தி சுரேஷ், மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ படத்தின் ரிலீஸ் அப்டேட் வெளியாகி உள்ளது.

16-ம் நூற்றாண்டில் கேரளாவில் வாழ்ந்த கடற்படை தலைவர்கள் குஞ்சலி மரைக்காயர் என்று அழைக்கப்பட்டனர். இவர்களில் 4-வது குஞ்சலி மரைக்காயர் வீர தீரம் நிறைந்தவராக போற்றப்பட்டார். அவரது வாழ்க்கையை மையமாக வைத்து ‘மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம்’ என்ற படம் தயாராகி உள்ளது. ரூ.100 கோடி செலவில் தயாராகியுள்ள இப்படத்தை பிரியதர்ஷன் இயக்கியுள்ளார்.

இதில் குஞ்சலி மரைக்காயர் வேடத்தில் மோகன்லால் நடித்துள்ளார். நடிகைகள் கீர்த்தி சுரேஷும், மஞ்சு வாரியரும் நாயகிகளாக நடித்துள்ளனர். மேலும் அர்ஜுன், சுனில் ஷெட்டி, அசோக் செல்வன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். தமிழ், மலையாளம், தெலுங்கு, இந்தி உள்பட 5 மொழிகளில் தயாராகி உள்ளது.

இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து கொரோனா உள்ளிட்ட சில பிரச்சினைகளால் 2 வருடங்களாக திரைக்கு வராமல் முடங்கி உள்ளது. இப்படம் கடந்த மார்ச் மாதம் ரிலீசாகும் என்று அறிவித்து வெளியாகவில்லை. பின்னர் ஓணம் பண்டிகையையொட்டி ஆகஸ்டு மாதம் திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவித்தனர். அப்போதும் படம் வரவில்லை. இது மோகன்லால் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் மரைக்காயர் அரபிக்கடலின் சிங்கம் படத்தை தியேட்டருக்கு பதிலாக ஓடிடி தளத்தில் வெளியிட பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தரப்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது. பேச்சுவார்த்தை இறுதியானவுடன் ரிலீஸ் தேதியை அதிகாரபூர்வமாக அறிவிக்க திட்டமிட்டுள்ளனர். இப்படம் மூன்று தேசிய விருதுகளை வென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!