எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா – விமர்சனம்

நடிகர் அகில்
நடிகை இஷாரா
இயக்குனர் கெவின்
இசை வர்சன், ஜேடன்
ஓளிப்பதிவு ரஹீம் பாபு
நாயகன் அகில், கிராமத்தில் வசித்து வருகிறார். எப்படியாவது சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்ற கனவுடன் இருக்கிறார். அதே ஊரைச் சேர்ந்த மொட்டை ராஜேந்திரனும் நாயகனுக்கு உதவியாக இருக்கிறார். அந்த சமயத்தில் நாயகன் அகிலுக்கு பட வாய்ப்பு வருகிறது. அந்த படத்திற்காக நடிப்பு பயிற்சியும் எடுக்கிறார் அகில். அந்த படத்தை தயாரிக்கும் தயாரிப்பாளர் செய்யும் சூழ்ச்சியால், அகில் அப்படத்தில் இருந்து நீக்கப்படுகிறார்.

இதனால் மனமுடைந்து போகும் நாயகன் அகில், மீண்டும் தன் கிராமத்துக்கே சென்று விடுகிறார். அகிலை ஹீரோவாக்க வேண்டும் என்ற முனைப்புடன் இருக்கும் மொட்டை ராஜேந்திரன், நாமே ஏன் படம் எடுக்க கூடாது என ஐடியா கொடுக்கிறார். இதையடுத்து என்ன ஆனது, இவர்கள் படம் எடுத்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் அகில், கிராமத்து இளைஞர் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தி இருக்கிறார். நடிப்பிலும் ஸ்கோர் செய்துள்ளார். இப்படத்தில் இவருக்கு ஜோடியாக இஷாரா நாயர், கிருஷ்ண பிரியா, சஹானா ஆகியோர் நடித்துள்ளனர். அழகு பதுமையுடன் இருக்கும் மூவரும், சில காட்சிகளே வந்தாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

மொட்டை ராஜேந்திரனை இந்தப் படத்தில் புதுவிதமாக காட்டி உள்ளனர். பல படங்களில் வில்லனாகவும், காமெடியனாகவும் நடித்த இவர், இந்தப் படத்தில் குணச்சித்திர வேடத்தில் திறம்பட நடித்துள்ளார். யோகிபாபு ஒரு சில காட்சிகளில் வந்து தனக்குரிய பாணியில் சிரிக்க வைத்துள்ளார்.

புதுமுக இயக்குனர் கெவின் இயக்கி உள்ளார். படத்தில் சுவாரஸ்யம் குறைவாக உள்ளது பின்னடைவு. கிளைமாக்ஸ் ரசிக்கும்படியாக அமைத்த அவர் திரைக்கதையில் சற்று கவனம் செலுத்தி இருக்கலாம்.

வர்சன் மற்றும் ஜேடனின் இசையில் பாடல்கள் சுமார் ரகம் தான். ரஹீம் பாபுவின் ஒளிப்பதிவு நேர்த்தியாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘எங்கடா இருந்தீங்க இவ்வளவு நாளா’ சுவாரஸ்யம் குறைவு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!