நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு – விமர்சனம்

நடிகர் மகேந்திரன்
நடிகை மியா ஸ்ரீ
இயக்குனர் நல்.செந்தில்குமார்
இசை ஸ்ரீகாந்த் தேவா
ஓளிப்பதிவு ஜே.ஆர்.கே
கிராமத்தில் வாழ்ந்து வருகிறார் நாயகன் மகேந்திரன். இவர் இருக்கும் ஊரில் கோவில் திருவிழா நடக்க இருக்கிறது. இதற்காக ஒவ்வொரு குடும்பத்தினரிடம் 1500 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. இதில் ஊரில் இருக்கும் ஒருவர் எதிர்ப்பு தெரிவிக்கிறார். மேலும் திருவிழா நடக்கும் போது மதுபோதையில் ரகளையும் செய்கிறார்.

இந்நிலையில் எதிர்ப்பு தெரிவித்தவர் மறுநாள் இறந்து கிடக்கிறார். இதனால் திருவிழா நிறுத்தப்படுகிறது. மேலும் இறந்தவர் இரவு நேரத்தில் ஆவியாக வருவதாக பலரும் கூறுகிறார்கள். இறுதியில் அந்த ஊருக்கு என்னதான் ஆச்சு? ஆவியாக வந்து பயமுறுத்த என்ன காரணம்? நாயகன் மகேந்திரன் இதை கண்டுபித்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக நடித்திருக்கும் மகேந்திரன், வழக்கம்போல் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். எந்த வேலையாக இருந்தாலும் காசு கொடுத்தால்தான் செய்வேன் என்கிற இவருடைய கதாபாத்திரம் ரசிக்க வைக்கிறது. நாயகியாக வரும் மியாஸ்ரீ, மகேந்திரனை காதலிப்பது, பாடல்களுக்கு என்று வந்து செல்கிறார். ஆர்.சுந்தர்ராஜன், மனோஜ் குமார், பசங்க சிவக்குமார், அப்புக் குட்டி, தவசி, பெஞ்சமின், லொள்ளு சபா உதயா ஆகியோர் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவி இருக்கிறார்கள்.

சின்ன கதையை சஸ்பென்ஸ், திரில்லர் கலந்து சொல்லி இருக்கிறார் இயக்குனர் நல்.செந்தில்குமார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். கிராமத்தில் நடக்கும் அமானுஷ்ய விஷயங்கள் ஒரு பக்கம் நடக்கும் போது, தேவையில்லாத காட்சிகள் படத்திற்கு வந்து செல்வது பலவீனமாக அமைந்திருக்கிறது. 3 மணிநேர படத்திற்காக தேவையில்லாத விஷயங்களை திணித்தது போல் இருக்கிறது. திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் கூடுதலாக ரசித்திருக்கலாம்.

ஜே.ஆர்.கே.வின் ஒளிப்பதிவும், ஸ்ரீகாந்த் தேவாவின் இசையும் படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது.

மொத்தத்தில் ‘நம்ம ஊருக்கு என்னதான் ஆச்சு’ சுவாரஸ்யம் குறைவு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!