பூம் பூம் காளை – விமர்சனம்

நடிகர் கெவின்
நடிகை சாரா
இயக்குனர் ஆர்.டி.குஷால் குமார்
இசை ஸ்ரீநாத்
ஓளிப்பதிவு கே.பி.வேல்முருகன்
நாயகன் கெவின் – நாயகி சாரா இருவருக்கும் திருமணம் ஆகிறது. இருவரும் தேனிலவிற்காக ஊட்டி செல்கிறார்கள். அங்கு முதலிரவிற்காக தயாராகிறார் கெவின். ஆனால், சாராவோ நமக்குள் நல்ல புரிதல் வந்த பிறகு முதலிரவு வைத்துக் கொள்ளலாம் என்று தடை போடுகிறார்.

தன் ஆசைகளை கட்டுப்படுத்த முடியாத கெவின், சாராவை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், சாரா, கெவினின் ஆசைக்கு அடங்க மறுக்கிறார். இதனால் இவர்களுக்குள் விரிசல் ஏற்படுகிறது. இறுதியில் இருவரும் வாழ்க்கையில் ஒன்று சேர்ந்தார்களா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் கெவின், அடங்காத காளை போல், இவரின் நடிப்பை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது. நாயகி சாரா, கொடுத்த வேலையை செய்திருக்கிறார். இருவரும் புதுமுகங்கள் என்பது திரையில் தெளிவாக தெரிகிறது. இருவருக்கும் இடையேயான கெமிஸ்ட்ரி நன்றாக இருக்கிறது.

போலீஸ் அதிகாரியாக வரும் அபிநயஸ்ரீ நடிப்பில் பளிச்சிடுகிறார். அப்புக்குட்டியின் காமெடி திரைக்கதை ஓட்டத்திற்கு ஆங்காங்கே கை கொடுத்திருக்கிறது.

கணவன், மனைவிக்குள் நடக்கும் ஈகோவை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் ஆர்.டி.குஷால் குமார். இரண்டு கதாபாத்திரங்களை மட்டுமே திரையில் அதிக நேரம் காண்பித்து, அவர்களை சுற்றியே அதிக நேரம் திரைக்கதை நகர்வது அதிக சுவாரஸ்யம் இல்லாமல் இருக்கிறது. ஆர்.சுந்தராஜன், சச்சு ஜோடியை வைத்து இளைய தலைமுறைக்கு அறிவுரை சொல்லி இருக்கிறார். இதை ஓரளவிற்கு ஏற்க முடிகிறது.

கே.பி.வேல்முருகனின் ஒளிப்பதிவு, ஊட்டியை அழகாக காண்பிக்கிறது. ஸ்ரீநாத்தின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். ரிஷா ஆடும் குத்தாடம் தாளம் போட வைக்கிறது.

மொத்தத்தில் ‘பூம் பூம் காளை’ அடங்கிய காளை.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!