பழகிய நாட்கள் – விமர்சனம்

நடிகர் மீரான்
நடிகை மேகனா
இயக்குனர் ராம் தேவ்
இசை ஷேக் மீரா, ஜான் ஏ அலெக்ஸிஸ்
ஓளிப்பதிவு மணிவண்ணன், பிலிப் விஜய்குமார்
நாயகன் மீரானும், நாயகி மேக்னாவும் ஒரே பள்ளியில் படித்து வருகிறார்கள். இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வருகிறார்கள். இவர்களின் காதல் இருவரது பெற்றோர்களுக்கும் தெரியவருகிறது. இவர்களை கண்டித்து இருவரையும் பிரிக்கவும் முயல்கின்றனர்.

ஆனால் அது முடியாமல் போகிறது. பின்னர் இருவரும் நன்றாக படித்து பெரியாளாக மாறுங்கள் நாங்களே திருமணம் செய்து வைக்கிறோம் என்று கூறுகிறார்கள். இதை மனதில் வைத்து நாயகி மேக்னா படிப்பில் கவனம் செலுத்தி டாக்டராக மாறுகிறார். ஆனால், மீரான் படிப்பில் கவனம் செலுத்தாமல் குடிகாரனாக மாறுகிறார்.

இறுதியில் மீரானின் காதலை மேக்னா ஏற்றுக் கொண்டாரா? அல்லது மீரானை திருத்தினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் மீரான் பள்ளி மாணவன் கதாபாத்திரத்திற்குக் கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார். இரண்டாம் பாதியில் வித்தியாசமான நடிப்பை கொடுத்து கவர்ந்திருக்கிறார். நாயகி மேக்னா பல சின்ன பட்ஜெட் படங்களில் நாயகியாக நடித்தவர். பல படங்களில் நடித்த அனுபவம் இங்கே அவருக்கு கைக்கொடுத்திருக்கிறது. பள்ளியில் காதல்வயப்பட்டு பேசுவதும்.. காதலரைத் திருத்த முயற்சித்து தோல்வியடைந்து.. விரக்தியின் உச்சத்தில் நின்று பேசுவதும் என சில காட்சிகளில் ஸ்கோர் செய்திருக்கிறார். மேலும் நாயகன் மற்றும் நாயகியின் பெற்றோர்களாக நடித்தவர்கள் தங்களது பதை, பதைப்பை உணர்ந்து காட்டியிருக்கிறார்கள்.

இளம் வயதில் ஏற்படும் காதல் அவர்களின் வாழ்வில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்..? என்பதை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குனர் ராம்தேவ். பள்ளிப் பருவக் காதலால் வரும் ஈர்ப்பைவிட பக்குவப்பட்ட வயதில் ஏற்படும் காதல்தான் சிறந்தது என்பதை புரியும்படியாக செல்லியிருக்கிறார். சில காட்சிகளை குறிப்பால் உணர்த்தியிருக்கிறார் இயக்குனர் ராம்தேவ். நாயகியின் குடும்பத்தினர் திட்டமிட்டு செய்யும் செயலை ரசிக்க வைத்திருக்கிறார். முதலில் மெதுவாக செல்லும் திரைக்கதை, பின்னர் படத்துடன் பார்ப்பவர்களை ஒன்ற வைக்கிறது.

பிலிப் விஜயக்குமாரின் ஒளிப்பதிவை வித்தியாசம் பார்க்க முடியாமல் ரசிக்க முடிந்திருக்கிறது. ஜான் ஏ. அலெக்ஸிஸ் – ஷேக் மீரா இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். குறிப்பாக செந்தில் கணேஷ் பாடியிருக்கும் பாடல் இதமாக இருக்கிறது.

மொத்தத்தில் ‘பழகிய நாட்கள்’ பார்க்கலாம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!