செம திமிரு – விமர்சனம்

நடிகர் துருவ சார்ஜா
நடிகை ராஷ்மிகா மந்தனா
இயக்குனர் நந்தா கிஷோர்
இசை சந்தன் ஷெட்டி
ஓளிப்பதிவு விஜய் மில்டன்
தந்தை மீது பாசமாக இருக்கும் நாயகன் துருவா சார்ஜா சிறுவயதில் இருக்கும் போது தந்தையை இழக்கிறார். இவரது தாய் துருவா சார்ஜாவின் நன்மைக்காக இரண்டாவது திருமணம் செய்துக் கொள்கிறார். இதை புரிந்துக் கொள்ளாமல் தாயிடம் சண்டைப் போடுகிறார். மேலும் இரண்டாவது தந்தையை விட்டு பிரிந்து தன்னுடன் வருமாறு அழைக்கிறார். இதற்கு அவரது தாய் மறுப்பு தெரிவிப்பதால், விரக்தி அடைந்து வீட்டை விட்டு வெளியேறி திமிரு பிடித்தவனாக மாறுகிறார்.

வளர்ந்து பெரியவனாக மாறும் துருவா சார்ஜா, ஊரில் இருப்பவர்களை மிரட்டி பணத்திற்காக எதுவும் செய்பவராக மாறுகிறார். இந்நிலையில், நிலத்தை அபகரிக்கும் சம்பத், துருவா சார்ஜா இருக்கும் ஏரியாவை அபகரித்து அங்கிருக்கும் மக்களை வெளியேற்ற நினைக்கிறார். இதற்கு துருவா சார்ஜாவும் துணை நிற்கிறார்.

இறுதியில் துருவா சார்ஜா, தனது தாயுடன் இணைந்தாரா? ஏரியா மக்களை சம்பத்துடன் இணைந்து விரட்டினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தில் நாயகனாக வரும் துருவா சார்ஜா, இளம் வயது நடிகராகவும், வாலிபனாகவும் நடித்து அசத்தி இருக்கிறார். குறிப்பாக ஆக்‌ஷன் காட்சிகளில் கவனிக்க வைத்திருக்கிறார். திமிரு பிடித்தவன் கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்திருக்கிறார். நடனத்தில் அப்லாஸ் வாங்குகிறார்.

நாயகியாக வரும் ராஷ்மிகா மந்தனா அழகாக வந்து அளவான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். துருவா சார்ஜா லவ் டார்ச்சர் பண்ணும் போது பார்ப்பவர்களை பரிதாபப்பட வைக்கிறார் ராஷ்மிகா. துருவா சார்ஜாவின் தாயாக வருபவரும், தந்தையாக வரும் ரவி சங்கரும் அனுபவ நடிப்பை கொடுத்திருக்கிறார். தனக்கே உரிய பாணியில் வில்லத்தனத்தில் அசத்தி இருக்கிறார் சம்பத்.

ஆக்‌ஷன், சென்டிமென்ட், காதல் என கமர்சியல் படத்திற்கு தேவையான அனைத்தையும் வைத்து படமாக்கி இருக்கிறார் இயக்குனர் நந்தா கிஷோர். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். படம் நீளமாக இருப்பதாலும், டப்பிங் படம் என்பதாலும் முழுமையாக ரசிக்க முடியவில்லை. தேவை இல்லாத காட்சிகளை இயக்குனர் தவிர்த்திருக்கலாம். மேலும் ஹீரோ கடைசியாக மாறும் காட்சியை இன்னும் அழுத்தமாக சொல்லி இருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

சந்தன் ஷெட்டி இசையில் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட். விஜய் மில்டனின் ஒளிப்பதிவோடு பாடல் காட்சிகளை பார்க்கும் போது சிறப்பாக இருக்கிறது. சண்டைக் காட்சிகளிலும் விஜய் மில்டன் அதிக ஸ்கோர் செய்திருக்கிறார்.

மொத்தத்தில் ‘செம திமிரு’ திமிரு கொஞ்சம் குறைவு.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!