நானும் சிங்கிள் தான் – விமர்சனம்

நடிகர் தினேஷ்
நடிகை தீப்தி சதி
இயக்குனர் ஆர் கோபி
இசை ஹிதேஷ் மஞ்சுநாத்
ஓளிப்பதிவு கே ஆனந்த் ராஜ்
தினேஷ் பெண்களிடம் பேச தயங்கும் 90களில் பிறந்த ஒரு பையன். டாட்டூ போடும் கடை நடத்தி வருகிறார். 29 வயதாகும் அவருக்கு 30 வயதுக்குள் திருமணம் முடிக்க வேண்டும் என்று ஜாதகத்தில் சொல்லிவிட அவரின் நண்பர்களான கதிர், ஆதித்யா, செல்வா மூவரும் தீவிரமாக பெண் தேடுகிறார்கள். ஒரு ஆபத்தில் இருந்து தீப்தியை காப்பாற்றும் தினேஷ் அவர்மீது காதலாகிறார்.

தீப்தியின் தோழிகள் வைக்கும் சோதனைகளில் தினேஷ் வெற்றி பெற்றாலும் காதலே பிடிக்காத தீப்தி, தினேஷ் காதலை ஏற்காமல் லண்டன் சென்றுவிடுகிறார். அங்கும் சென்று தினேஷ் தன் காதலை தெரிவிக்கிறார். தினேஷின் காதலை நிராகரிக்க தீப்தி ஒரு அதிர்ச்சியான முடிவை எடுக்கிறார். அது என்ன முடிவு? தினேஷ் தீப்தியை எப்படி கரம் பிடித்தார்? என்பதே நானும் சிங்கிள் தான் கதை.

தினேஷ் நவநாகரீக இளைஞராக நடித்திருக்கிறார். பெண்களை பற்றி பேசுவது ஆனால் பெண்களிடம் பேச தயங்குவது என்று 90’ஸ் கிட்ஸ் இளைஞனை பிரதிபலிக்கிறார். அவரது இயல்பான உடல்மொழி கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறது.

நாயகியாக நடித்திருக்கும் தீப்தி தன்னை சுற்றித்தான் படம் நகர்கிறது என்பதை உணர்ந்து நடித்துள்ளார். அவர் காதலை வெறுக்க வலுவான காரணம் வைத்திருக்கலாம். தினேஷின் நண்பர்களாக வரும் கதிர், ஆதித்யா, செல்வா மூவரும் படத்தை கலகலப்பாக நகர்த்துகிறார்கள். மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, ரமா ஆகியோரும் திரைக்கதை ஓட்டத்திற்கு உதவுகிறார்கள்.

ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையில் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. ஆனந்த்ராஜின் ஒளிப்பதிவில் லண்டன் காட்சிகள் அழகாக இருக்கின்றன. ஆண்டனியின் படத்தொகுப்பில் 2ஆம் பாதியில் சில நிமிட காட்சிகள் மட்டும் சற்று நீளமாக தெரிகிறது.

ஆண்கள் மேல் நம்பிக்கையே இல்லாமல் தன்னால் சிங்கிளாவே வாழ்க்கை முழுவதும் வாழமுடியும் என நினைக்கும் பெண்ணுக்கும், கனவிலும் காதல் கைகூடாமல் சிங்கிளாவே இருக்கும் இளைஞனுக்கும் இடையே நடக்கும் காதல், மோதல் என சுவாரசியமான கதையை பிடித்துள்ளார் இயக்குனர் ஆர்.கோபி. இளைஞர்களை கவரும் வகையில் காட்சிகளை வைத்து கிளைமாக்சில் அழுத்தமான கருத்தையும் முன்வைத்துள்ளார். இன்றைய இளைஞர்களுக்கான படமாக அமைந்துள்ளது.

மொத்தத்தில் ‘நானும் சிங்கிள் தான்’ இளமை துள்ளல்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!