நான் நடித்த படங்கள் எம்.ஜி.ஆருக்கே பிடிக்கவில்லை – முதல் மரியாதை தீபன்

நான் நடித்த படங்கள் எம்.ஜி.ஆருக்கே பிடிக்கவில்லை என்று முதல் மரியாதை படத்தில் நடித்த தீபன் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

சிவாஜி கணேசன், ராதா நடிப்பில் பாரதிராஜா இயக்கிய பெரும் வெற்றிப்படம் ‘முதல் மரியாதை’. கடந்த 1985ஆம் ஆண்டு வெளிவந்த இந்த படத்தில் தீபன் மற்றும் ரஞ்சனி இளம் ஜோடிகளாக நடித்திருப்பார்கள். தீபன் மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் மருமகன். அதாவது ஜானகி எம்.ஜி.ஆரின் அண்ணன் மகன். இந்த நிலையில் 36 ஆண்டுகளுக்கு பின் தீபன் நேற்று வெளியான கேர் ஆப் காதல் படத்தில் நாயகனாக நடித்துளார்.

அவரது நடிப்புக்கு விமர்சகரகளிடமும் ரசிகர்களிடமும் பாராட்டு கிடைத்து வருகிறது. தீபன் அளித்த பேட்டியில் கூறியதாவது, ‘எல்லா பாராட்டுகளும் இயக்குனர் ஹேமம்பர் ஜஸ்தியையே சேரும். நான் யார் என்று தெரியாமலேயே விமான நிலையத்தில் தற்செயலாக பார்த்து நடிக்க அணுகினார். நடிக்க வந்த வாய்ப்புகளை ஏற்றுக்கொள்ளாமல் இருந்த என்னை வற்புறுத்தி நடிக்க வைத்தார்.

இந்த படத்துக்காக படப்பிடிப்புக்கு முன்பே 3 மாதங்கள் நடிப்பு பயிற்சி கொடுத்தார். இந்த கதாபாத்திரத்துக்காக எடையை குறைத்தேன். பள்ளி, கல்லூரி நிர்வாகத்திலேயே தீவிரமாக இருந்த நான் இந்த படத்துக்காக வாக்கிங் செல்ல தொடங்கினேன். முதல் மரியாதை படத்துக்கு பின் மிஸ்டர் பாரத், நிலாவை கையில புடிச்சேன், ஊர்க்குருவி, நல்லதே நடக்கும் உள்ளிட்ட தமிழ் படங்களிலும் ஒரு மலையாள படத்திலும் நடித்தேன்.

முதல் மரியாதைக்கு பின் நான் நடித்த படங்கள் எம்.ஜி.ஆருக்கே பிடிக்கவில்லை. அவர் தயாரிப்பில் நடிக்க வைப்பதாக சொன்னார். ஆனால் அதன் பின்னர் அவர் உடல்நலம் குன்றிவிட்டது. எம்.ஜி.ஆர் அனுமதியுடன் தான் நடிக்க வந்தேன். மற்றபடி எனக்கு அரசியலில் ஆர்வம் இல்லை. இந்த படத்துக்கு கிடைத்த பாராட்டுகள் உற்சாகம் அளிக்கிறது. தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களில் நடிக்க ஆர்வமாக இருக்கிறேன்’. இவ்வாறு அவர் கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!