பாவக் கதைகள் – விமர்சனம்

நடிகர் கௌதம் வாசுதேவ் மேனன்
நடிகை சிம்ரன்
இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன்
இசை கார்த்திக்
ஓளிப்பதிவு கணேஷ் ராஜவேலு
திரையுலகில் தற்போது ஆந்தாலஜி என்று அழைக்கப்படும் ஒரு சில குறும்படங்களின் குவியல் பிரபலமாகி வருகிறது. அந்தவகையில் தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களாக வலம் வரும் சுதா கொங்கரா, விக்னேஷ் சிவன், கெளதம் மேனன், வெற்றிமாறன் ஆகியோர் இணைந்து இயக்கியுள்ள ஆந்தாலஜி படம் ‘பாவக் கதைகள்’. ஆணவக்கொலையை கதைக்கருவாக வைத்து இந்த நான்கு குறும்படங்களும் உருவாக்கப்பட்டுள்ளது.

தங்கம்
நாயகன் சாந்தனு இந்து மதத்தை சார்ந்தவர். இவரை முஸ்லிம் மதத்தை சார்ந்த திருநங்கையாக இருக்கும் காளிதாஸ் திருமணம் செய்ய நினைக்கிறார். ஆனால் சாந்தனு காளிதாசனை நண்பராக நினைத்து வருகிறார். மேலும் காளிதாசன் சகோதரி பவானி ஶ்ரீயை சாந்தனு காதலிக்கிறார். சாந்தனு – பவானி ஶ்ரீ இருவரின் காதலுக்கு காளிதாஸ் உதவ மறுக்கிறார். இறுதியில் சாந்தனுவின் காதல் என்ன ஆனது என்பதே படத்தின் மீதிக்கதை.

காளிதாஸ் நடிப்பு இப்படத்திற்கு பெரிய பலம். திருநங்கை கதாபாத்திரத்திற்கு கச்சிதமாக பொருந்தியிருக்கிறார். தமிழ் சினிமாவிற்கு கிடைத்த சிறந்த நடிகர் என்று சொல்லலாம். அந்த அளவிற்கு சிறப்பாக நடித்துள்ளார் காளிதாஸ். சாந்தனு எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். பவானி ஸ்ரீ குறைவான காட்சிகளே வந்தாலும் திறம்பட நடித்திருக்கிறார்.

சிறிய காதல் கதையை திருநங்கை மூலமாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் சுதா கொங்கரா. சமூகத்தில் திருநங்கைகள் படும் அவலத்தை ஒளிவுமறைவின்றி காட்டியிருக்கிறார். நான் யாரையாச்சு இப்படி தொட்டா ஒண்ணு தப்பா நினைப்பாங்க… இல்லைன்னா தள்ளிப்போவாங்க… யாரும் என்னை இப்படி அன்பா கட்டிப்பிடிச்சது இல்ல தங்கம்” என்று காளிதாஸ் சொல்லும் காட்சி கண் கலங்க வைக்கிறது.

இந்தக்கதை 1980களில் நடப்பது போன்று வடிவமைக்கப்பட்டுள்ளது. ஜோமன் டி ஜானின் ஒளிப்பதிவு நம்மை அந்த காலகட்டத்திற்கே கொண்டு செல்கிறது. ஜஸ்டின் பிரபாகரின் பின்னணி இசை அற்புதம். தங்கமே தங்கம் பாடல் மனதை வருடிச் செல்கிறது

லவ் பண்ண விட்டுடணும்
கலப்புத் திருமணம் செய்துவைத்து அவர்களை ஆணவக்கொலை செய்து வருகிறார் பதம் குமார். ஜாதி வெறி பிடித்த இவருக்கு இரண்டு மகள்கள். இவர்கள் 2 பேரும் வெவ்வேறு ஜாதி உள்ளவர்களை காதலிக்கிறார்கள். ஆணவக்கொலை செய்து வரும் பதம் குமார் தன் மகளின் காதலை ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பதே படத்தின் கதை.

படத்தில் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார் அஞ்சலி. சந்தோஷம், மகிழ்ச்சி, கவர்ச்சி என நடிப்பில் கவர்ந்து இருக்கிறார் அஞ்சலி. தந்தையாக வரும் பதம் குமார், முதன்முதலில் நடித்தாலும் அலட்டல் இல்லாத நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். இவருக்கு அடியாளாக வரும் ஜாபர் சாதிக் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி கவனிக்க வைத்திருக்கிறார். கல்கி கோச்சலின் அட்டகாசமான நடிப்பு ரசிக்கும்படி உள்ளது.

விக்னேஷ் சிவன் இந்த கதையை இயக்கி இருக்கிறார். மகளையே கொல்லத் துணியும் தந்தை இறுதியில் அமைதியாக இருப்பது ஏற்றுக் கொள்ளும்படியாக இல்லை. கதாபாத்திரங்களை சிறப்பாக வேலை வாங்கியிருக்கிறார்.

தேனி ஈஸ்வரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தாக அமைகிறது. அனிருத்தின் பின்னணி இசையும், இறுதியில் மகளுக்காக தந்தை எழுதும் மன்னிப்பு கடிதத்தை பாட்டாக பாடியுள்ள விதமும் சிறப்பு.

வான் மகள்
மனைவி சிம்ரன், ஒரு மகன், இரண்டு மகள்களுடன் வாழ்ந்து வருகிறார் கௌதம் மேனன். வயதுக்கு வராத இவரது இரண்டாவது மகளை சிலர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்குகின்றனர். போலீசிடம் சென்றால் குடும்ப மானம் போய்விடும் எனத் தவிக்கும் அந்தக்குடும்பம், மகளை பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியது யார் என்பதை எப்படி கண்டுபிடித்தது என்பதே படத்தின் மீதிக் கதை.

தந்தையான கெளதம் மேனன் மதுரையிலும், ஒரு சென்னைக்காரராகவே வாழ்ந்திருக்கிறார். எந்தப் பதற்றமும் இல்லாத நடிப்பு. சிம்ரனின் கதாபாத்திரம் படத்திற்கு பெரிய பலம். அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.

மகனாக வரும் ஆதித்யா பாஸ்கர் துணிச்சலாக நடித்துள்ளார், மகள்களும் கொடுத்த வேலையை சிறப்பாக செய்திருக்கிறார்கள். கௌதம் மேனன் இயக்கியிருக்கும் இப்படம், தன்னுடைய பாணியில் இருந்து முற்றிலும் வேறுவிதமாக இயக்கி இருக்கிறார்.

கணேஷ் ராஜவேலுவின் நேர்த்தியான ஒளிப்பதிவு காட்சிக்கும் பலம் சேர்த்திருக்கிறது. கார்த்திக்கின் பின்னணி இசை திரைக்கதையோடு ஒன்றி பயணிக்க வைக்கிறது.

ஓர் இரவு
வேற்று ஜாதி இளைஞரை காதலித்து திருமணம் செய்துகொள்ளும் சாய்பல்லவி கணவருடன் பெங்களூருவுக்கு சென்றுவிடுகிறார். மகளின் திருமணத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த பிரகாஷ் ராஜ், மகள் கர்ப்பமாக இருப்பதை அறிந்ததும் மனம்மாறி பெங்களூருக்கு பார்க்க செல்கிறார்.

மகளுக்கு வளைகாப்பு நடத்தப்போவதாக கூறி சொந்த ஊருக்கு அழைத்து வருகிறார். குடும்பத்தினரை நீண்ட நாட்களுக்கு பின் பார்த்ததும் பாச மழை பொழிகிறார் சாய் பல்லவி. இவ்வாறு மகிழ்ச்சியாக செல்லும் கதையில் சாதி வெறி பிடித்த பிரகாஷ் ராஜ் ஒரு அதிர்ச்சி கொடுக்கிறார். அது என்ன என்பதே படத்தின் மீதிக்கதை.

வெற்றிமாறன் இயக்கி இருக்கும் இப்படத்தில் ஆணவக்கொலையை வெளிப்படையாக காண்பித்திருக்கிறார்கள். காணும்போது பதற்றத்தை ஏற்படுத்துகிறது. தந்தையாக நடித்திருக்கும் பிரகாஷ்ராஜ், சாய் பல்லவியின் தந்தை – மகள் பாசம் பார்ப்போரை நெகிழ வைக்கின்றது. இறுதியில் பிரகாஷ் ராஜ் செய்யும் வேலைகளை பார்க்க மனதில் தைரியம் வேண்டும். கர்ப்பிணிப் பெண்ணாக வரும் சாய் பல்லவியின் நடிப்பு வேற லெவல்.

சுரேஷ் பாலாவின் ஒளிப்பதிவும், சிவாத்மிகாவின் பின்னணி இசையும் படத்துக்கு பலம் சேர்த்துள்ளது.

ஆணவக் கொலைகளை மையமாக வைத்து 4 இயக்குனர்களும் இப்படத்தை உருவாக்கியிருக்கிறார்கள். ஆணவக்கொலையின் பயங்கரத்தை சொன்ன இயக்குனர்கள் அதற்கான தீர்வை சொல்லாதது வருத்தம்.

மொத்தத்தில் ‘பாவக் கதைகள்’ பயங்கரம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!