திருவாளர் பஞ்சாங்கம் – விமர்சனம்

நடிகர் ஆனந்த் நாக்
நடிகை நாயகி இல்லை
இயக்குனர் மலர்விழி நடேசன்
இசை ஜே.வி
ஓளிப்பதிவு காசி விஸ்வா
நாயகன் ஆனந்த் நாக், ஜோசியம், ஜாதகம், நல்ல நேரம் இவைகளின் மீது அதிகப்படியான நம்பிக்கை வைத்திருக்கிறான். தனக்கோ அல்லது தன் நண்பர்களுக்குக்கோ எதாவது பிரச்சினை என்றால், அதனை ஜோதிடம் மற்றும் நல்ல நேரம் போன்றவற்றை பார்த்து பயன்படுத்தி தீர்த்து கொள்கிறான்.

ஒரு கட்டத்தில் நாயகனும், அவனது நண்பனும் எதிர்பாராத விதமாக ஒரு கொலை வழக்கில் சிக்குகிறார்கள். அதிலிருந்து அவன் எப்படி வெளியே வந்தான்?, அவன் கண்மூடித்தனமாக நம்பும் ஜோசியம் அவனுக்கு கை கொடுத்ததா? இல்லையா? என்பதே படத்தின் மீதிக்கதை.

நாயகன் ஆனந்த் நாக், இந்தக் காலத்துல இப்படி ஒரு பையனா என கேட்கும் அளவுக்கு சாமி பக்தி, ஜோசியம், நல்ல நேரம் கெட்ட நேரம் பாக்குறது என முற்றிலும் வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பிரேமம், நேரம், வெற்றிவேல் போன்ற படங்களில் சைடு ரோலில் நடித்துள்ள இவர், இப்படத்தில் நடனம், சண்டை என ஹீரோ கேரக்டருக்கு தன்னால் முடிந்தவரை உழைத்துள்ளார். இந்த படத்தில் ஹீரோவுக்கு ஜோடி யாரும் இல்லை.

ஹீரோவின் நண்பராக நடித்துள்ள காதல் சுகுமார், அவ்வப்போது காமெடி செய்ய முயற்சித்திருக்கிறார். ஹீரோவுக்கு ஜோடி கொடுக்காத இயக்குனர், இவருக்கு ஹீரோயின் ரேஞ்சில் இருக்கும் ஒரு பெண்ணை ஜோடி சேர்த்துவிட்டு அதிர்ச்சி கொடுத்துள்ளார்.

ஊர்வசி, சுதா, போலீஸ் அதிகாரியாக வரும் ஆடுகளம் நரேன் ஆகியோர் தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தி கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுத்துள்ளனர். வில்லனாக நடித்துள்ள கவுதம், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளார்.

அறிமுக இயக்குனர் மலர்விழி நடேசன், முதல் படத்திலேயே வித்தியாசமான கதைகளத்தை கையாண்டுள்ளார். திரைக்கதையில் கவனம் செலுத்தி இருந்தால் இன்னும் ரசித்திருக்கலாம். காட்சிகளின் நீளம் படத்திற்கு பின்னடைவாக அமைந்துள்ளது. காமெடி ஒர்க் அவுட் ஆகாதது படத்தின் மைனஸ்.

ஜேவி இசையமைத்துள்ளார். படத்தில் இரண்டே பாடல்கள் தான். அதுவும் சுமார் ரகம் தான். பின்னணி இசை ஓகே. காசி விஸ்வாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு படத்திற்கு பலம்.

மொத்தத்தில் ‘திருவாளர் பஞ்சாங்கம்’ நல்ல முயற்சி.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!