விரைவில் ‘இந்தியன் 2’ ஷூட்டிங்…. பக்கா பிளானுடன் தயாராகும் கமல்

ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1996ஆம் ஆண்டு வெளியாகி வெற்றிபெற்ற படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகம் தற்போது உருவாகி வருகிறது. கமல்-‌ஷங்கர் கூட்டணியில் உருவாகும் இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. கடந்த பிப்ரவரி மாதம் வரை இதன் படப்பிடிப்பு சுமூகமாக நடந்து வந்தது.

பிப்ரவரி மாதம் 19-ந் தேதி படப்பிடிப்பு தளத்தில் கிரேன் சரிந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்தனர். இதையடுத்து படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது. அப்போது நிறுத்தப்பட்ட படப்பிடிப்பு தற்போது வரை தொடங்கப்படவில்லை.

இடையே இப்படம் கைவிடப்பட்டதாகவும் செய்திகள் பரவி வந்தன. ஆனால் இதனை படக்குழு திட்டவட்டமாக மறுத்தது. இதனால் இந்தியன் 2 படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என்கிற எதிர்பார்ப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி வருகிற ஜனவரி (2021) மாதம் இறுதியில் அல்லது பிப்ரவரி முதல் வாரத்தில் கமல்ஹாசன் படப்பிடிப்பில் கலந்து கொள்ளவார் என கூறப்படுகிறது. மேலும் அடுத்த சில மாதங்களில் சட்டமன்ற தேர்தல் வருவதால், ஒரே மாதத்தில் படப்பிடிப்பை முடித்துக் கொடுத்துவிட்டு பிரச்சாரத்தில் ஈடுபட அவர் திட்டமிட்டுள்ளாராம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!