‘இரண்டாம் குத்து’ படத்துக்கு தடை விதிக்கப்படுமா? – அமைச்சர் விளக்கம்

‘இரண்டாம் குத்து’ படத்துக்கு தடை விதிக்கப்படுமா என்பது குறித்து அமைச்சர் கடம்பூர் ராஜு சமீபத்திய பேட்டியில் விளக்கம் அளித்துள்ளார்.

ஹரஹர மஹாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற அடல்ட் காமெடி படங்களை இயக்கிய சந்தோஷ் பி.ஜெயக்குமார் அடுத்ததாக ‘இரண்டாம் குத்து’ என்ற படத்தை இயக்கி உள்ளார். இப்படத்தில் அவரே ஹீரோவாகவும் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான இப்படத்தின் டீசர் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் ஆபாச வசனங்கள், காட்சிகள் அதிகமாக உள்ளதால் ரசிகர்களும், திரையுலகத்தைச் சேர்ந்தவர்களும் படத்திற்கு கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், தமிழ் கலாச்சாரத்திற்கு எதிரான படங்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது: “தமிழ் கலாச்சாரம், பண்பாட்டை சீரழிக்கும் எந்த படமாக இருந்தாலும் தடை விதிக்க நடவடிக்கை எடுக்கப்படும். திரைப்படங்களில் வரும் ஆபாச காட்சிகளை நீக்க மத்திய அரசுக்கும், சென்சார் போர்டுக்கும் வலியுறுத்தப்படும். அத்தகைய படத்துக்கு முற்றுப்புள்ளி வைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்கும். மக்களுக்கு நல்ல கருத்துக்களைக் கூறும் சாதனமாக திரைப்படங்கள் இருக்க வேண்டும்”. என அவர் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!