போதை பொருள் வழக்கு – பிரபல நடிகரை தொடர்புபடுத்த எதிர்ப்பு

போதை பொருள் வழக்கு பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் பிரபல நடிகரை தொடர்புபடுத்த எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்தி, கன்னட பட உலகம் போதை பொருள் புகாரால் ஆட்டம் கண்டுள்ளது. போதை பொருள் கும்பலுடன் தொடர்பு வைத்து இருந்ததாக ஏற்கனவே இந்தி நடிகை ரியா சக்கரவர்த்தி, கன்னட நடிகைகள் ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் கைதாகி சிறையில் உள்ளனர்.

போதை பொருள் தொடர்பாக நடந்த வாட்ஸ் அப் உரையாடலை வைத்து இந்தி நடிகை தீபிகா படுகோனேவின் மானேஜர் கரிஷ்மா பிரகாசுக்கும் அவர் பணியாற்றும் தனியார் நிறுவன அதிகாரிக்கும் போதை பொருள் போலீசார் சம்மன் அனுப்பி உள்ளனர். விசாரணை வளையத்துக்குள் இருக்கும் இந்த தனியார் நிறுவனத்தில் சல்மான்கானும் ஒரு பங்குதாரராக இருக்கிறார் என்று வலைத்தளத்தில் தகவல் பரவியது.

இதையடுத்து சல்மான்கானுக்கு எதிராக பலரும் பதிவுகளை வெளியிட்டு கண்டித்தார்கள். இதற்கு விளக்கம் அளித்து சல்மான்கானின் வழக்கறிஞர் ஆனந்த் தேசாய் வெளியிட்டுள்ள அறிக்கையில், “க்வான் திறன் மேலாண்மை நிறுவனத்தில் நடிகர் சல்மான்கான் பங்குதாரராக இருக்கிறார் என்று தவறான செய்தி வெளியாகி உள்ளது. அந்த நிறுவனத்துடன் நேரடியாகவோ மறைமுகமாகவோ சல்மான்கானுக்கு எந்த தொடர்பும் இல்லை. சல்மான்கான் குறித்து தவறான தகவலை பரப்ப வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!