இந்தி தெரியாததால் விமான நிலையத்தில் வெற்றிமாறனுக்கு நடந்த கொடுமை

இந்தி தெரியாத காரணத்தால் தான் டெல்லி விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாக வெற்றிமாறன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் தரமான படங்களை கொடுப்பவர் என்றால் அது வெற்றிமாறன் தான். தனுஷின் பொல்லாதவன் படம் மூலம் இயக்குனராக அறிமுகமான இவர், ஆடுகளம், விசாரணை, வட சென்னை, அசுரன் என அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குனராக உயர்ந்தார். இன்று பிறந்தநாள் கொண்டாடும் அவருக்கு ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இந்தி தெரியாத காரணத்தால் தான் டெல்லி விமான நிலையத்தில் அவமதிக்கப்பட்டதாக வெற்றிமாறன் சமீபத்திய பேட்டியில் கூறியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனடாவில் நடைபெற்ற திரைப்பட விழாவில் ஆடுகளம் படத்தை ஸ்கிரீன் செய்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பினோம்.

டெல்லி விமான நிலையத்தில் இமிகிரேஷன் பிரிவில் இருந்தவர் என்னிடம் இந்தியில் பேசினார். எனக்கு இந்தி தெரியாது என்று ஆங்கிலத்தில் நான் அவரிடம் கூறினேன். ஆனால் அதற்கு அவரோ, இந்த நாட்டின் தாய்மொழி உங்களுக்கு தெரியாதா எனக் கேட்டார். என் தாய் பேசும் மொழி தமிழ். அதனால் அது தான் என் தாய்மொழி என கூறினேன். பிறரிடம் பேச எனக்கு ஆங்கிலம் தெரியும் என்பதையும் அவரிடம் கூறினேன்.

நான் சொன்னதை கேட்டு அந்த நபருக்கு கோபம் வந்துவிட்டது. நீங்கெல்லாம் இப்படித் தான். தமிழர்களும், காஷ்மீர் மக்களும் தான் இந்த தேசத்தை பிரிக்கிறீர்கள். நீங்கள் எல்லாம் தீவிரவாதிங்கன்னு என்னவெல்லாமோ பேசி என்னை தனியாக நிற்க வைத்துவிட்டார்.

நாங்க கல்ச்சுரல் எக்ஸ்சேஞ்சுக்காக கனடாவுக்கு போயிட்டு வந்துள்ளோம். இவர் இந்த வருடம் தேசிய விருது வாங்கிய இயக்குனர் என்று என்னுடன் வந்திருந்த தயாரிப்பாளர் கதிரேசனும், இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷும் அந்த நபரிடம் எடுத்து சொல்லியும் அவர் கேட்கல. 45 நிமிடம் என்னை தனியாக நிற்க வச்சிட்டார். அதன் பிறகு வேறு ஒரு அதிகாரி வந்துதான் என்னை போகச் சொன்னார்.

என் தாய்மொழியில் நான் பேசுவது எப்படி இந்த நாட்டோட ஒருமைப்பாட்டை சீர்குலைக்கும்?. என் தாய்மொழியில் நான் படிப்பது எப்படி இந்த நாட்டின் வளர்ச்சியை தடுக்கும் என்று வெற்றிமாறன் கேள்வி எழுப்பியுள்ளார். தேசிய விருது வென்ற இயக்குனருக்கே இந்த கதி என்றால், சாதாரண மக்களின் நிலை என்னவாகும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!