அரசியலில் ஈடுபடும்படி அழைப்புகள் வருகின்றன – சோனுசூட்

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழி படங்களில் வில்லனாக நடித்து பிரபலமான சோனு சூட், தனக்கு அரசியல் அழைப்புகள் வருவதாக கூறியுள்ளார்.

தமிழில் சந்திரமுகி, ஒஸ்தி, தேவி உள்ளிட்ட பல படங்களில் வில்லகான நடித்தவர் சோனு சூட். இவர் கொரோனா காலத்தில் பொதுமக்களுக்கு செய்த உதவிகளால் இந்தியா முழுவதும் கவனம் பெற்றுள்ளார். புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வாகனங்கள் ஏற்பாடு செய்து கொடுத்து சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைத்தார். மருத்துவர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள் தங்க இடம் கொடுத்தார். வெளிநாட்டில் தவித்த மாணவர்களை தனி விமானத்தில் அழைத்து வந்தார். இதனால் சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை பாராட்டி வருகிறார்கள்.

சோனு சூட் அரசியலில் ஈடுபட வேண்டும் என்றும் அழைப்புகள் வருகின்றன. இதற்கு பதில் அளித்து சோனுசூட் கூறும்போது, “அரசியலில் ஈடுபடும்படி பல வருடங்களாகவே எனக்கு அழைப்புகள் வருகின்றன. ஒரு நல்ல தலைவனாக என்னால் மாற முடியும் என்றும் கூறுகிறார்கள். ஆனால் இப்போது நான் நடிகனாக இருப்பதால் அரசியலுக்கு வர சிந்திக்கவில்லை. ஒரே நேரத்தில் இரண்டு படகில் சவாரி செய்ய விருப்பம் இல்லை. நான் ஒரு வேளை அரசியலில் ஈடுபடுவதாக இருந்தால் 100 சதவீதம் உழைப்பை கொடுப்பேன். எல்லோரும் பிரச்சினை இல்லாமல் வாழ்கிறார்கள் என்பதையும் உறுதி செய்வேன்.” என்றார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!