பறவைகளே பத்திரம்… இது தீப்பிடித்த காடு – ஊரடங்கு தளர்வு குறித்து வைரமுத்து டுவிட்

தமிழகத்தில் ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ள நிலையில், கவிஞர் வைரமுத்து அதுகுறித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

தமிழக அரசு ஊரடங்கை தளர்த்தியதன் மூலம் 5 மாதங்களுக்கு பிறகு நேற்று மீண்டும் பஸ்போக்குவரத்து தொடங்கியது. அலுவலகங்கள் செல்லும் ஊழியர்களால் சாலைகளில் கார், இருசக்கர வாகன போக்குவரத்து நெரிசல் அதிகம் இருந்தன. வணிக வளாகங்கள், வழிபாட்டு தலங்களிலும் மக்கள் குவிந்தனர்.

இ-பாஸ் ரத்தினால் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வோர் எண்ணிக்கையும் அதிகமாக இருந்தது. இது ஒரு புறம் மக்களுக்கு மகிழ்ச்சியை அளித்தாலும் இந்த தளர்வினால் கொரோனா பரவுமோ என்ற பீதியும் நிலவுகிறது. அதிகம் பேர் முககவசம் அணியவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது.

இந்த நிலையில் ஊரடங்கு தளர்வு குறித்து கவிஞர் வைரமுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் கவிதை வெளியிட்டுள்ளார். அதில், “ஊருக்கு வழங்கப்பட்ட ஊரடங்கின் தளர்வில் உயிர்க்கொல்லி நுழைந்து விடக்கூடாது. மீண்டும் இயங்கப்போகும் வாழ்வியல் வெளியில் கடும் கட்டுப்பாட்டைப் பெரிதும் கைக்கொள்வீர் பெருமக்களே. இது தீப்பிடித்த காடு. பறவைகளே பத்திரம்” என்று குறிப்பிட்டு உள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!