வில்லத்தன வேடங்களை உயர்வாக கொண்டாட கூடாது – டாப்சி

திரைப்படங்களில் வில்லத்தனமாக வரும் கதாபாத்திரங்களை பாராட்டுவதில் தனக்கு உடன்பாடு இல்லை என நடிகை டாப்சி தெரிவித்துள்ளார்.

சமீப காலமாக கதாநாயகனை வில்லனாக சித்தரிக்கும் கதையம்சத்தில் பல படங்கள் வருகின்றன. அந்த கதாநாயகன் செய்யும் கொலை, கொள்ளைகளை ரசிகர்கள் ரசிக்கிறார்கள். இத்தகைய படங்கள் நல்ல வசூலும் குவிக்கின்றன.

தெலுங்கில் அதிக வரவேற்பை பெற்ற அர்ஜுன் ரெட்டி படத்தில் கதாநாயகனாக நடித்த விஜய் தேவரகொண்டாவும் அளவுக்கு மீறி கோபப்படுவது, மது குடிப்பது, புகைப்பிடிப்பது, பெண்களுடன் தகாத உறவு வைத்து இருப்பது, கதாநாயகியை காதலிக்க வைக்க இம்சிப்பது என்றெல்லாம் நடித்து இருந்தார். இந்த படத்தை இந்தியில் ஷாகித் கபூர் நடிக்க கபீர் சிங் என்ற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டபோது பெண்கள் நல அமைப்பினர் கண்டனம் தெரிவித்தனர். நடிகை டாப்சியும் எதிர்ப்பு தெரிவித்தார்.

தற்போது கொரோனா ஊரடங்கில் சமூக வலைத்தள நேரலையில் அவர் அளித்துள்ள பேட்டியில் இந்த படம் பற்றி கூறியதாவது: “ஆணும் பெண்ணும் சமத்துவமாக வாழ்வதை நான் ஆதரிக்கிறேன். அதே நேரம் திரைப்படங்களில் வில்லத்தனமாக வரும் கதாபாத்திரங்களை பாராட்டுவதில் எனக்கு உடன்பாடு இல்லை. நானும் பத்லா படத்தில் வில்லியாக நடித்து இருக்கிறேன்.

அந்த வில்லி கதாபாத்திரத்தை உயர்வாக கொண்டாட கூடாது. அதே மாதிரிதான் கபீர் சிங் படமும். அதில் கெட்ட பழக்கம் உள்ளவராக நடித்துள்ள ஆணின் குணங்களை கொண்டாடுவது எனக்கு பிடிக்கவில்லை. எனக்குபிடிக்காத படங்களை நான் பார்ப்பது இல்லை. மற்றவர்கள் பார்ப்பதையும் தடுக்க மாட்டேன்.” இவ்வாறு டாப்சி கூறினார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!