நடிப்புத் திறனால் பாராட்டை பெற்றவர் சிரஞ்சீவி.. பிரதமர் மோடி வாழ்த்து..

53-வது சர்வதேச இந்திய திரைப்பட திருவிழா கோவாவில் நேற்று தொடங்கியது. இதில் உலகின் சிறந்த திரைப்படங்கள் திரையிடப்படும். இதன் தொடக்க விழாவில் இந்தி திரையுலகைச் சேர்ந்த நடிகர்கள் அஜய் தேவ்கன், வருண் தவான், கார்த்திக் ஆர்யன், மனோஜ் பாஜ்பாய், பாடலாசிரியர் பிரசூன் ஜோஷி மற்றும் நடிகை சாரா அலிகான் உள்ளிட்டோர் தொடக்க விழாவில் கலந்து கொண்டனர்.

இதைத்தொடர்ந்து நடப்பு ஆண்டின் சிறந்த இந்திய திரைப்பட ஆளுமை விருதுக்கு பிரபல நடிகர் சிரஞ்சீவி தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதனை மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்குர் தெரிவித்தார். ஏறக்குறைய 4 தசாப்தங்களாக நடிகர், நடன கலைஞர் மற்றும் தயாரிப்பாளர் என 150 படங்களில் பணியாற்றி நடிப்புத் துறையில் நடிகர் சிரஞ்சீவி புகழ் பெற்றுள்ளார் என மத்திய மந்திரி தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

இந்நிலையில், நடிகர் சிரஞ்சீவிக்கு வாழ்த்து தெரிவித்து பிரதமர் நரேந்திர மோடி பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், “சிரஞ்சீவி மாறுபட்ட நடிப்புத் திறனால் பல பாத்திரங்களில் நடித்து சில தலைமுறை பார்வையாளர்களின் பாராட்டையும் மரியாதையையும் பெற்றுள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.






  • இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!