மதுவோடு கொரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பி வைக்க வேண்டாம் – கஸ்தூரி

தமிழகத்தில் பரவல் அதிகமாக இருக்கும் சமயத்தில் மதுக்கடைகளை திறப்பதன் மூலம் மதுவோடு கொரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பி வைக்க வேண்டாம் என நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

கொரோனா ஊரடங்கினால் மூடப்பட்டு இருந்த மதுக்கடைகள் நாளைமுதல் திறக்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. கடந்த சில தினங்களாக தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மதுக்கடைகள் திறக்கப்பட்டால் அது மேலும் அதிகரிக்கும் அபாயம் உள்ளதால், இதற்கு பிரபலங்கள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் நடிகை கஸ்தூரி டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “அரசு செய்வது தவறு. நாடு முழுவதும் நடந்த கூத்தை பார்த்த பிறகுமா மது கடையை திறக்க துணிகிறீர்கள். குடி, கொரோனா இரண்டுக்கும் ஒரே சமயத்தில் பலியிடுகிறீர்கள். தமிழக அரசை மன்றாடி கேட்டுக்கொள்கிறேன், கொரோனாவின் தாக்கம் குறைவாக இருக்கும்போது மூடிவிட்டு இப்போது அதிகமாகும்போது திறக்காதீர்கள். இதனால் வரும் வருவாயை விட இழப்பு அதிகமாகி விடும். கடையில் வாங்கும் மதுவோடு கொரோனாவை வீட்டுக்கு வீடு அனுப்பி வைக்க வேண்டாம்” என்று கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!