திரைத்துறை பணிகளுக்கு தளர்வு வேண்டும் – அரசுக்கு பெப்சி வேண்டுகோள்

சினிமா டப்பிங், ரீ ரெக்கார்டிங் மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புக்கு அனுமதி வழங்க வேண்டும் என அரசுக்கு ‘பெப்சி’ வேண்டுகோள் விடுத்துள்ளது.

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன (பெப்சி) தலைவர் ஆர்.கே.செல்வமணி அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: “மத்திய-மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிப்பதற்கு 5 நாட்களுக்கு முன்பே தமிழ் திரைப்படத்துறையின் அனைத்து வேலைகளையும் நிறுத்தி ஏறக்குறைய 50 நாட்களை கடக்க இருக்கிறோம்.

இனியும் வேலை முடக்கம் நீடிக்கப்பட்டால் கொரொனா வைரஸ் பாதிப்பில் இருந்து தப்பித்த தொழிலாளர்கள் பசிப்பிணியில் பட்டினி சாவுகளை எதிர்நோக்க வேண்டிய அபாயகரமான சூழ்நிலையில் உள்ளார்கள். தற்போது 17 தொழில்துறைக்கு நிபந்தனையுடன் கூடிய அனுமதி வழங்கி இருப்பதை போல் திரைப்பட துறைக்கும் தொலைக்காட்சிகளுக்கும் நிபந்தனையோடு அனுமதி வழங்கிடுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

குறைந்த பட்சம் திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு அல்லாத பணிகளான ரெக்கார்டிங், ரீ ரெக்கார்டிங், டப்பிங், போன்ற போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகளுக்கும் தொலைக்காட்சி படப்பிடிப்புகளுக்கும் அனுமதி வழங்கினால் சம்மேளனத்தின் 40, 50 சதவீத தொழிலாளர்கள் வேலை செய்யக்கூடிய சூழ்நிலை ஏற்படும் என்பதையும் அவர்கள் பட்டினி சாவிலிருந்து தப்பிக்க முடியும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த பணிகளை சமூக இடைவெளியுடன் செய்ய வைக்க முடியும் என்பதையும் தெரிவித்து இதற்கான அனுமதி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். மத்திய மாநில அரசுகளின் கட்டுப்பாடுகளையும் நிபந்தனைகளையும் ஏற்று இந்த பணிகளை சமூக இடைவெளியுடன் மருத்துவ பாதுகாப்புடன் சுகாதாரமான முறையில் செய்வோம் என்றும் உறுதி அளிக்கின்றோம்”. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!