இப்போதைக்கு அஜித், சிம்பு படம் பாக்காதீங்க…. கவுதம் மேனன் வேண்டுகோள்

அஜித் நடித்த என்னை அறிந்தால், சிம்புவின் அச்சம் என்பது மடமையடா போன்ற படங்களை இப்போதைக்கு பார்க்க வேண்டாம் என இயக்குனர் கவுதம் மேனன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் உலகம் எங்கும் தனது கோரமுகத்தை காட்டி வருகிறது. அதில் இருந்து தப்பிக்க இந்தியாவில் நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. இதனால் மக்கள் வீடுகளிலேயே முடங்கிக்கிடக்கும் சூழல் உருவாகி உள்ளது. சினிமா படப்பிடிப்புகள் ரத்து செய்யப்பட்டுள்ளதால், திரைப்பிரபலங்கள் பலர் வீட்டில் இருந்தபடியே கொரோனா குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

அந்த வகையில் ராமநாதபுரம் எஸ்.பி. டாக்டர் வருண்குமார் ஐ.பி.எஸ் அவர்களின் வேண்டுகோளுக்கு இணங்க, இயக்குனரும், நடிகருமான கவுதம் வாசுதேவ் மேனன், விழிப்புணர்வு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் ஊரடங்கை உதாசீனப்படுத்தாமல் வீட்டிலேயே இருக்குமாறு அறிவுறுத்தி உள்ளார்.

மேலும் இந்த ஊரடங்கு காலத்தில் படங்கள், புத்தகங்கள் படிக்க அறிவுறுத்திய அவர், தான் இயக்கிய என்னை அறிந்தால், அச்சம் என்பது மடமையடா ஆகிய 2 படங்களை பார்க்க வேண்டாம் என கேட்டுக்கொண்டார். ஏனெனில் அந்த இரண்டு படங்களிலும் நாயகன் ஊர் ஊராக சுற்றுவதுபோல் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும், ஆகையால் அந்த இரு படங்களும் இந்த சூழ்நிலைக்கு ஏற்றவாறு இருக்காது என கூறியுள்ளார்.

அதேபோல் அவர் இயக்கத்தில் சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் படத்தை பார்க்குமாறு கூறினார். அப்படத்தில் சூர்யா உடற்பயிற்சி செய்வது போன்று நீங்களும் வீட்டில் இருந்தபடியே செய்யலாம் என கவுதம் மேனன் அந்த வீடியோவில் கூறியுள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!