கடலில் கட்டுமரமாய் – விமர்சனம்

நடிகர் ரக்சன்
நடிகை ரித்திகா
இயக்குனர் யுவராஜ் முனிஷ்
இசை ஏ.கே.ராம்ஜி
ஓளிப்பதிவு செந்தில் குமார்

விவசாயத்திற்குகாக போராடி, விவசாய சங்க தலைவராக இருந்து வருகிறார் நாயகன் ரக்‌ஷனின் தந்தை பாலு. இவரின் மகன் ரக்‌ஷன் சென்னையில் சாப்ட்வேர் வேலையில் பணி புரிந்து வருகிறார். இவரது திறமையால் வெளிநாட்டில் இருப்பவர்கள் தமிழ்நாட்டில் பெரிய முதலீடு செய்ய வருகிறார்கள். ரக்‌ஷன் முன் நின்று புதிய திட்டத்தை ஆரம்பித்து நன்றாக முடித்து கொடுக்கிறார்.

இந்நிலையில், கிராமத்தில் நிலத்தை அபகரிக்கும் முயற்சி நடக்கிறது. இதை நாயகனின் தந்தை பாலு எதிர்க்கிறார். அவர்களுடன் நடக்கும் மோதலில் நாயகனின் தந்தையும், நண்பரும் இறக்கிறார்கள். மனவேதனையடையும் ரக்‌ஷன், எதனால் இவர்கள் இறந்தார்கள் என்பதை அறிய முயற்சிக்கிறார்.

வெளிநாட்டு முதலீட்டார்கள் மூலம், தான் கொண்டுவந்த திட்டத்தால்தான் தந்தையும், நண்பரும் இறந்தார்கள் என்பதை அறிந்து அதிர்ச்சியடைகிறார் ரக்‌ஷன். இறுதியில் ரக்‌ஷன் விவசாய நிலங்களுக்கு போராட்டினாரா? தான் கொண்டுவந்த திட்டத்தை தொடர்ந்து செயல் படுத்தினாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

படத்தின் நாயகனாக நடித்திருக்கும் ரக்‌ஷன், ஆக்‌ஷன், சென்டிமெண்ட், காதல் காட்சி என அனைத்திலும் நடிப்பு திறனை வெளிப்படுத்த முயற்சி செய்திருக்கிறார். தன்னால்தான் தந்தைக்கு ஏற்பட்ட நிலையை நினைத்து வருந்தும் காட்சியில் கவனிக்க வைத்திருக்கிறார். மற்றொரு நாயகனாக வரும், இளயா, நாயகிகளாக வரும் ரித்திகா, லதா இசை ஆகியோர் கொடுத்த வேலையை செய்திருக்கிறார்கள். தந்தையாக வரும் கோவை பாலு நடிப்பால் மனதில் பதிகிறார்.

விவசாயத்தை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் யுவராஜ் முனிஷ். 10 பேர் சேர்ந்து ஆரம்பித்த ஜல்லிக்கட்டு போராட்டம் நாளடைவில் ஆயிரக்கணக்காணோர் சேர்ந்து எப்படி வெற்றிகண்டதோ, அதுபோல் ஏன் விவசாயத்துக்காக மக்கள் போராட கூடாது என்பதை இயக்குனர் வலியுறுத்தி இருக்கிறார். அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டால் என்ன ஆகும் என்பதை சொல்லவந்ததற்கு பாராட்டுகள். சின்ன சின்ன தவறுகள் இருந்தாலும் வசனங்கள், சொல்ல வந்த கருத்துகள் திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார்கள்.

ஏ.கே.ராம்ஜியின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். செந்தில் குமாரின் ஒளிப்பதிவை ஓரளவிற்கு ரசிக்க முடிகிறது.

மொத்தத்தில் ‘கடலில் கட்டுமரமாய்’ விவசாய போராட்டம்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!