டப்பிங் யூனியன் தேர்தல் – ராதாரவிக்கு எதிராக களமிறங்கும் சின்மயி

தென்னிந்திய சினி, டெலிவிஷன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்துக்கு நடைபெறும் தேர்தலில் ராதாரவிக்கு எதிராக பாடகி சின்மயி போட்டியிடுகிறார்.

தென்னிந்திய சினி, டெலிவிஷன் டப்பிங் ஆர்ட்டிஸ்ட் சங்கத்தில் சுமார் 1600 உறுப்பினர்கள் உள்ளனர். இந்த சங்கத்தின் தலைவராக நடிகர் ராதாரவி இருந்துவருகிறார். 2018ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் வெற்றி பெற்று தலைவர் ஆனார். சங்க நிர்வாக குழுவின் பதவி காலம் முடிவதால் வரும் 15ந்தேதி சங்கத்துக்கு தேர்தல் நடைபெற இருக்கிறது. தலைவர் பதவிக்கு ராதாரவி மீண்டும் களம் இறங்குகிறார்.

அவரது தலைமையில் களம் இறங்கும் அணியை எதிர்த்து ராமராஜ்யம் என்ற பெயரில் ஒரு அணி போட்டியிடுகிறது. இந்த அணி சார்பில் தலைவர் பதவிக்கு பாடகியும் டப்பிங் கலைஞருமான சின்மயி களம் இறங்குகிறார். இன்று அவர் தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.

முன்னதாக ‘மீடூ’ விவகாரத்தில் சின்மயி கூறிய புகார்களை ராதாரவி கடுமையாக விமர்சித்தார். இதனால் இருவருக்கும் மோதல் ஏற்பட்டது. சின்மயி சந்தா செலுத்தவில்லை என்று கூறி சங்கத்தில் இருந்து நீக்கப்பட்டார். பின்னர் கோர்ட்டில் முறையிட்டு மீண்டும் உறுப்பினர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!